தி.மு.க மற்றும் த.வெ.க இடையே போட்டி நிலவும் என்று விஜய் கூறிய கருத்துக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 30) திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது, பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அதன்படி, "நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்தும் ஆட்சியாளர்களின் அலுவலகங்களாக செயல்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது. தேர்தல்களில் தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வருகிறோம். ஆனால், சி - வோட்டர் கருத்துக் கணிப்பில் நாம் தமிழர் கட்சி இடம்பெறவில்லை. இந்த முறையும் தனித்து தான் போட்டியிடுவோம்.
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை சுட்டுக் கொலை செய்தது ஏன்? இதில் சரியான விசாரணை நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது வெளிப்படையாக இருந்தது. அதற்கு ஏன் சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்ய வேண்டும்? செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சுட்டுப் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
2026-ஆம் ஆண்டில் தி.மு.க மற்றும் த.வெ.க இடையே தான் போட்டி இருக்கும் என்று விஜய் கூறிய கருத்தை வரவேற்கிறேன். தி.மு.க-வுடன் மோதி அந்தக் கட்சியை அழித்து, வீழ்த்த நினைக்கும் விஜய்யின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். எனினும், ஆள் சேர்த்து கொண்டு சண்டைக்கு செல்லும் மரபு எனக்கு இல்லை.
என் எதிரியை நான் என்றுமே தனியாக தான் சந்திப்பேன். கூட்டத்தில் நிற்பதற்கு வீரமோ, துணிவோ தேவையில்லை. தனித்து நிற்பதற்காக தான் வீரம் தேவைப்படுகிறது. நாம் தமிழர் கட்சியினர் வீரர்களாக இருக்கிறோம். கூட்டணி இல்லாமல் இருக்கலாம்; கொள்கை இல்லாமல் தான் இருக்க முடியாது.
கூட்டணி வைத்து தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மரபு இருக்கிறதா? எதிரியை தீர்மானித்து விட்டு தான் நாங்கள் சண்டைக்கு வந்தோம். இதனால் எங்களுக்கு குழப்பமோ, தடுமாற்றமோ இல்லை. இன்னும் 4 மாதங்களில் யாரெல்லாம் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்று தெரிந்து விடும். வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு இருக்கிறோம். சின்னம் ஒதுக்கப்பட்டதும் எங்கள் வேலையை தொடங்குவோம்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.