சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று அதிகாலை காலமானார். இதையடுத்து இறுதி சடங்களுக்காக தஞ்சாவூரில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று அஞ்சலி செலுத்தினார்.
நடராஜனின் உடலுக்கு இன்று மாலை தஞ்சையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “நடராஜன் தமிழ் சமூகத்தின் முக்கிய நபர். அவரின் மறைவுக்குத் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் இரங்கள் கூட தெரிவிக்காதது நாகரீமற்ற செயல்.” என்று குற்றச்சாட்டினார்.
மேலும் விருப்பம் இல்லையென்றாலும் நடராஜனை ஒரு மொழி போராட்டவாதி, இலக்கியவாதியாகக் கருதி இரங்கல் தெரிவித்திருக்கல் என்று கூறினார்.அதோடு, சசிகலாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பரோல் அளித்திருந்தால் தனது கணவரை உயிருடன் இருக்கும்போது பார்த்திருப்பார். அவரின் பரோலுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட கையெழுத்துப் போடாதது மன வேதனை அளிக்கும் செயல் எனவும் கருத்து தெரிவித்தார்.
சீமான் இவ்வாறு கூறியிருக்கையில் இதற்கு எதிர்மாறான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ ஒட்டுமில்லை உறவுமில்லை என்று ஆன பிறகு எதற்கு மரியாதை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.” என்று கூறினார்.
பின்னர், கட்சியினர் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.