/tamil-ie/media/media_files/uploads/2023/08/Seeman-4.jpg)
சீமான் photo: NTK facebook
இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையான நிலையில், அப்படி பேசியது ஏன் என சீமான் கொந்தளிப்பாக விளக்கம் அளித்து பேசியுள்ளார்.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் ஜூலை 30-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: “ஒவ்வொரு கலவரத்தின் பின்னணியிலும் பண வேட்டை இருக்கும். மணிப்பூர் கலவரத்திற்கும் அது தான் காரணம். ஆழ்ந்து பார்த்தால், மலைகளில், காடுகளில் வாழ்கிற பழங்குடி மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பா.ஜ.க-விற்கு வாக்கு செலுத்த மாட்டார்கள்.
தரை தளத்தில் வாழும் மெய்த்தி இன மக்கள், இந்துத்துவ கோட்பாட்டை ஏற்கும் மக்களாக இருக்கிறார்கள். அதனால், அங்கே பழங்குடி இன மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. நமக்கும் இது நடந்துள்ளது. ஒகி புயலில் மீன் பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்டோர் இறந்து போய்விட்டனர்.
வலிமை மிக்க கடற்படையை வைத்திருக்கும் நம் நாடு, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணவே இல்லை. மக்கள் போராடியும் எந்த மதிப்பும் அதற்கு தரவில்லை. கடைசியாக, ‘உயிரற்ற உடலையாவது ஒப்படையுங்கள், மரியாதையான நல்லடக்கம் செய்கிறோம்’ என்று கூட போராடினார்கள். அப்போது கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம், அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள், அவர்கள் வாக்கு நமக்கு வரப்போவதில்லை என்பதால் கண்டுகொள்ளவில்லை.
தேச ஒற்றுமையை பேச வக்கற்ற, தகுதியற்றவர்கள் தான் திரும்ப திரும்ப தேச ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். திடீரென இவர்கள் புனிதர்களாகிவிடுவார்கள். அதை நாம் நம்ப வேண்டும். குஜராத் கலவரத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியவர்கள் தி.மு.க.வினர். இவர்கள் மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
76-வது நாளில் பேசுகிறீர்கள். 76 நாளில் என்ன செய்தீர்கள்? தேர்தல் வருகிறது, அதனால் பேசுகிறீர்கள். அங்கு பாதிக்கப்படும் கிறிஸ்தவர்களை வைத்து, இங்குள்ள கிறிஸ்தவர்களிடம் ‘உனக்காக பேசுகிறோம்’ என்பதை காட்டுவதற்காக பேசுகிறார்கள். நான் ஈழத்தைப் பற்றி பேசிய போது, ‘அரசியலுக்காக பேசுகிறார்கள்’ என்று கூறியவர்கள் தான், இன்று மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேசுகிறார்கள். தேர்தல் ஆதாயத்திற்காக இவர்கள் பேசுகிறார்கள்.
ஆஊனா கட்டுச்சோறு கட்டிக்கிட்டு நடைபயணம் கிளம்பிவிடுகிறார்கள். குஜராத் மாடல் மாதிரி, திராவிட மாடல் மாதிரி நடைபயணம் ஓல்டு மாடல். ராகுல் காந்தி, நடையா நடந்தார், ஒன்னும் நடக்கல போய்ட்டார். 9 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு இப்ப தான் என்ன பிரச்னை என்று கேட்க வருகிறார்கள். பிரச்னையே நீங்க தானே!
மணிப்பூர் விவகாரத்தை நாம் பேசுவதால், நமக்கு அங்குள்ள மக்கள் ஓட்டுப் போடப்போவதில்லை. இங்குள்ள கிறிஸ்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடப் போவதில்லை. நாம நினைத்துக் கொண்டிருக்கிறாமே், இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
சும்மா தேவாலயத்திற்கு போய் ‘தேவனே வாரீர்.. வாரீர்னு,’ பாடிட்டு, எவனிடமோ நாட்டை கொடுத்துவிட்டார்கள். இந்த நாட்டில் நடந்த அநீதிக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகுள் 18 சதவீதம் வாக்குகளை தி.மு.க.வுக்கும், காங்கிரஸிற்கும் போட்டு போட்டு நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள் தான்.
சலிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகம், காரணம் இவர்கள் தான். இவர்கள் பாவம் கேட்கிறார்கள். பெரும்பாவமே அவர்கள் தான், அவர்களுக்கு எப்படி மன்னிப்பு கிடைக்கும். இன்னும் பாருங்கள், இவர்கள் தான் எங்களை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறார்கள்.
இஸ்லாமியர்களுக்கு தி.மு.க தான் பாதுகாப்பு. ஆமாம், சிறையில் வைத்து பல ஆண்டுகளாக பாதுகாப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு? மீண்டும் இதே இஸ்லாமியர்களிடம் அவர்கள் ஓட்டு கேட்பார்கள். இந்த முறையும் அதே பொய்யை சொல்லி ஓட்டு கேட்பார்கள். நீங்கள் அவவர்களை விடுதலை செய்யுங்கள், நாம் தமிழர் கட்சியும் உங்களுக்கு வாக்களிக்கும்” என்று அந்த ஆர்பாட்டத்தில் சீமான் பேசினார்.
இந்த ஆர்ப்பட்டத்தில் “இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.” என்று சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையானது.
ம.ம.க பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்ததோடு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியதாவது: “தொடர்ச்சியாக 18% வாக்கை தி.மு.க. காங்கிரசிற்குப் போடுகிறார்கள். பிறகு மாற்றம் எப்படி வரும்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகச் சொல்வார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய மாட்டார்கள். எங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது என்பதால் சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.க. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன். நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.