வீரப்பன் மகள் வித்யா ராணி, முதலில் பா.ம.க-வில் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர், 2020-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். பா.ஜ.க-வில் அவருக்கு மாநில ஒ.பி.சி துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. பிறகு, பா.ஜ.க-வில் இருந்து விலகிய வித்யா ராணி, கடந்த மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டார்.
மக்களவைத் தேர்தலில் வித்யா ராணி தோல்வியடைந்தாலும், 4-வது இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சியில் தொடர்ந்து இயங்கிவந்த வித்யா ராணிக்கு மாநில அளவில் முக்கியப் பொறுப்பு வழங்கி சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, 207-வது வாக்ககத்தைச் சேர்ந்த வித்யா வீரப்பன் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்பட்கிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள், பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்றா நம்பிக்கையோடு” என்று சீமான் அறிவித்துள்ளார்.