காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் காவலர்களை தாக்கியதாக பதிவு செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன் ஜாமீன் கோரிய மனுவிற்கு பதில் அளிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு அருகே பல்வேறு அமைப்புகளின் சார்பில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதில் காவலர்களை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியைத் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் உள்ளிட்டோர் பலர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தான் போராட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டதாகவும், தனக்கு எதிராக காவல்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் ஏற்கனவே பலர் முன்ஜாமின் பெற்றுள்ளதாகவும் எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு விடுமுறை கால சிறப்பு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதிலளிக்க மனுவுக்கு பதிலளிக்க திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.