நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக தெரிவித்தார். இதையடுத்து, சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 17 ஆம் தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சம்மன்
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக கோரி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் போலீஸ் நிலையத்தில் கடிதம் அளித்தார்.
இதையடுத்து, நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கில், நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என கூறி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியுள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில், சீமான் வீட்டிலிருந்து வெளியே வந்த நா.த.க நிர்வாகி ஒருவர் சம்மனை கிழித்து எறிந்தார். இதனையைடுத்து, போலீசார் வீட்டிற்குள் சென்று அந்த நபர் குறித்து விசாரிக்க சென்றனர். அப்போது அங்கு இருந்த சீமான் வீட்டு காவலாளி போலீசாரை தடுத்தி நிறுத்தி வாக்குவாதம் செய்தார். மேலும் அவர் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் காவலாளியை போலீசார் குண்டுக் கட்டாக கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் சம்மனை கிழித்த நபரையும் போலிசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, சீமான் வீட்டில் நடந்த சலசலப்புக்கு அவரது மனைவி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் சீமான் வீட்டு காவலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரரான காவலாளி அமல்ராஜ் தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசன்ஸ் பெற்று சட்ட விரோதமாக தொழில் ரீதியாக அதனை பயன்படுத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவல்
இந்த நிலையில், நாளை தன்னால் ஆஜராக முடியாது என்று போலீசாருக்கு சவால் விடுத்துள்ள சீமான், 'உங்களால் என்ன செய்ய முடியும்? நாளை தருமபுரி செல்கிறேன். நானே என்றாவது ஒருநாள் ஆஜராவேன்' என்று அவர் கூறியுள்ளார்.
ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில், "இதே வழக்கு தொடர்பாக என்னிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தினார்கள். அதே வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறார்கள். என் மீது தீவிரம் காட்டும் போலீசார் அண்ணா பல்கலை, பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் இதுபோன்று தீவிரம் காட்டவில்லையே.. என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து திமுக அரசுதான் அசிங்கப்படுகிறது.
நான் ஆஜராவேன் என உறுதி அளித்த பின்னர் காவல்துறைக்கு என்ன அவசரம். ஏன் என் வீட்டில் சம்மன் ஒட்ட வேண்டும்? ஆஜராவேன் என கூறிய பின்னரும் என்னை ஏன் விரட்டுகிறீர்கள்? வளசரவாக்கம் போலீஸ் நிலையம் எங்கே சென்றுவிடும்? காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன். என்னை எப்படி சமாளிக்க வேண்டுமென்று தெரியாமல் பெண்ணை வைத்து அடக்க முயற்சி செய்கின்றனர்.
நாளை காலை 11 மணிக்கெல்லாம் என்னால் ஆஜராக முடியாது. உங்களால் என்ன செய்ய முடியும்? நாளை தருமபுரி செல்கிறேன். நானே என்றாவது ஒருநாள் ஆஜராவேன். சம்பந்தப்பட்ட பெண்ணையும், என்னையும் ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.