கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை தாய் மதம் திரும்ப வேண்டும் என பேசவில்லை, நான் பேசியதை தவறாக புரிந்துக் கொண்டுள்ளனர் என சீமான் விளக்கம் அளித்துள்ளார் மேலும், பீகாரில் இருந்து தமிழகம் வந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தமிழரா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
சென்னையில் சில நாட்களுக்கு முன்னதாக பனைச்சந்தை திருவிழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்கள் இந்துக்கள் அல்ல. தமிழர்களின் சமயம் சிவசமயம். எங்கள் சமயம் சைவம். எங்கள் சமயம் மாலியம் எனும் வைணவம். கிறிஸ்தவம் ஐரோப்பிய மதம். இஸ்லாம் அரேபிய மதம். மரச்செக்குக்கு திரும்பியதை போல, கருப்பட்டிக்கு திரும்பியதைப் போல அனைவரும் தமிழ் சமயத்துக்கு திரும்புங்க என்று பேசியிருந்தார்.
சீமானின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சீமான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல. அனைவரும் தமிழ் சமயங்களான சைவம், மாலியத்துக்கு திரும்புங்க என்று கூறியிருந்தாலும், கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியரும் தாய்மதம் திரும்ப வேண்டும் என்ற வேண்டுகோளாக அது புரிந்து கொள்ளப்பட்டது. மேலும், சீமானின் இந்த பேச்சு இந்துத்துவவாதிகளின் குரலாக இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது. இயக்குனர் அமீரும் சீமானை விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில், பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்து பேசிய சீமான், நான் பேசியதை தவறாக புரிந்து கொள்கிறார்கள். கிறிஸ்தவர், இஸ்லாமியர்களை எல்லாம் நான் மதம் மாற சொன்னதாக சொல்கிறார்கள். நான் மதம் பரப்ப வந்த கால்டுவெல் அல்லது ஜி.யு.போப்பா? என்ன இது வேடிக்கையாக இருக்கு, நான் மதம் பரப்ப வந்தவன் இல்லை ராஜா… இனம் பரப்ப வந்தவன். நான் என் மொழி, இனம் அதில் உறுதியாக இருப்பேன். என் வரலாறு, கோட்பாடு அதில் உறுதியாக இருப்பேன்
ஹெச்.ராஜா வந்து இந்துக்கள் எல்லாம் தமிழர்கள். தமிழர்கள் எல்லாம் இந்துதான். அப்படின்னு பேசுறதை இங்க யாருமே எதிர்க்கலை…. யாருமே எதிர்க்கலையே.. அதற்கு எதிர்வினையாக தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் இல்லை என்று சொன்னேன். நாங்கள் சைவர்கள். என்னுடைய சமயம் சைவ சமயம். என்னுடைய சமயம் சிவசமயம். என்னுடைய சமயம் மாலியம். திருமாலை வழிபடுகிற கண்ணனை வழிபடுகிற மாலியம். அதை வைணவம் என்கிறீர்கள். நாங்கள் தூய தமிழில் மாலியம் என்கிறோம். ஹெச்.ராஜா, தமிழர் எல்லாம் இந்து, இந்து எல்லாம் தமிழர் என்றால் பீகாரில் இருக்கிறவன் எல்லாம்? குஜராத்தில் இருக்கிறவன் எல்லாம் தமிழராகிவிடுவானா? ஹெச்.ராஜா தமிழராகிவிடுவாரா? ஹெச்.ராஜா பீகாரில் இருந்து இங்க வந்து தமிழராகிவிடுவாரா? அதை ஒருத்தரும் எதிர்த்து பேசறது கிடையாது.
தாய் மதம் திரும்பச் சொல்லிட்டாரு சொல்றாங்க, அப்படி நான் சொல்லவே இல்லையே. நான் ஒன்னு பேச இவங்க ஒன்னு பேசிகிட்டு இருப்பாங்க. பல பேரு என் எச்சில் இருந்துதான் கட்சியையே நடத்திகிட்டு திரியறான். ஒருவேளை கிடையாது. அவ்வளவு பெரிய பனைச் சந்தை திருவிழாவை நடத்தி, அதில் அவ்வளவு பெரிய செய்திகளை சொல்றோம். அதைவிட்டு இதை பிடிச்சுகிட்டு சுத்திகிட்டு எல்லோரும் பேசுறாங்க.
மதுரையில் 2010 இல் கட்சி ஆரம்பிக்கும்போது சொன்னேன், இனி நாம் தமிழர் வாழ்க, நாம் தமிழர் ஒழிக இதுதான் இனி தமிழ்நாட்டில் அரசியல். வேற கொள்கை கோட்பாடு எதுவும் இல்லை. நம்மை திட்டுவதுதான். சும்மா பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.னு, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் பத்தி நீ எங்க பேசுற. பேசுறதே இல்லை. நம்மை திட்டுவதுதான் பிஜேபி எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு. இது ஒரு கொள்கைனு வெச்சுகிட்டு. அணுகழிவை இடிந்தகரையில் கொட்டலாம் என்று சொல்றான். அதப்பத்தி ஒருத்தர் கூட பேசலையே. அதுக்கும் நான் தான் பேசணும். மலையை வெட்டி கேரளாவுக்கு கொண்டு போறான், அத யாரும் கேக்கல, சீமானையும் நாம் தமிழர் கட்சியையும் திட்டணும் அவ்வளவு தான். இவ்வாறு சீமான் விளக்கம் அளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil