க.சண்முகவடிவேல்
Naam Tamilar Katchi | Seeman | Trichy: நாம் தமிழர் கட்சி சார்பில், எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். திருச்சி தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் 'ஜல்லிக்கட்டு ராஜேஷ்' போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், மக்களவை வேட்பாளர் ராஜேஷ் இன்று பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 11 மணி அளவில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து பிரச்சாரத்தைத் தொடங்க நாம் தமிழர் கட்சியினர் திட்டமிட்டு இருந்தனர். அதற்காக வேட்பாளர் ராஜேஷ், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர்.
அப்போது, அனுமதியின்றி கூடியதாக மரியாதை செலுத்த அவர்களுக்கு அனுமதி மறுத்த போலீசார், அவர்களை கைது செய்தனர். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்துவதற்கு தடையா?, அதற்காக அவர்களை கைது செய்வதா? இதுதான் திராவிட மாடலா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது போன்ற அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“