Seeman Controversy Speech About Rajiv Gandhi Assassination: ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சீமானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.
Advertisment
நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. விக்கிரவாண்டியில் நாம் தமிழர் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய சீமான், ‘ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்’ என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
சீமானின் பேச்சு காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்தது. அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டி போலீஸில் நேற்று இரவு புகார் அளித்தார். அதன் பேரில் வன்முறையைத் தூண்டுதல்(153A), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (504) ஆகிய இரு பிரிவுகளில் விக்கிரவாண்டி போலீஸார் சீமான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சீமானின் இந்தப் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்தார். சீமானை கைது செய்ய வேண்டும் என கோரி பல இடங்களில் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். மேலும் சில இடங்களிலும் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சி அலுவலகம், சீமானின் இல்லம் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.