புதிய கல்விக்கொள்கையைத் தி.மு.க. அரசு எதிர்ப்பது போல நடிப்பது ஏமாற்றும் அரசியல் நாடகம் - சீமான் விமர்சனம்

புதிய கல்விக்கொள்கையைத் தி.மு.க. அரசு எதிர்ப்பது போல நடிப்பது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமசனம் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Seeman

தமிழ்நாடு அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குத் தரவேண்டிய ரூ.2,152 கோடியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் ஆணவப்பேச்சு வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையைத் தி.மு.க. அரசு எதிர்ப்பது போல நடிப்பது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமசனம் செய்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குத் தரவேண்டிய ரூ.2,152 கோடியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் ஆணவப்பேச்சு வன்மையான கண்டனத்துக்குரியது.

மனுதர்மத்தையும், வர்ணாசிரமத்தையும் இரண்டற கலந்து, இந்தி திணிப்பையும், சமஸ்கிருத ஆதிக்கத்தையும் மேலோங்கச்செய்யும் நவீன குலக்கல்வி திட்டமான புதிய கல்விக்கொள்கையை எப்படி ஏற்க முடியும்? தமிழ்நாட்டின் வரலாற்றை, பண்பாட்டை மூடி மறைத்து, வடவரின் வரலாறே இந்திய வரலாறு என்று கற்பிக்க முயலும் புதிய கல்விக்கொள்கையை எப்படி ஏற்க முடியும்?

Advertisment
Advertisements

மொழிவழி தேசிய இனங்களின் இறையாண்மையைச் சிதைத்து, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்க வழிகோலும், பா.ஜ.க. அரசின் ஒரே சட்டம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே கல்விக்கொள்கை, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு என்ற ஒற்றை மையப்படுத்தும் பாசிச கொள்கைகள் நாட்டினை பிளந்து பிரிக்கக்கூடிய பேரழிவு நடவடிக்கைகளாகும். மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் இத்தகைய செயல்பாடுகள் யாவும் இந்திய அரசமைப்பிற்கே எதிரானதாகும்.

புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் நிதி தர முடியும் என்கிற மத்திய அரசு, புதிய கல்விக்கொள்கையை ஏற்காத தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் வேண்டாம் என்று கூறுமா? தமிழ் மக்களின் வரிப்பணம் இனிக்கிறது? அதனைத் திருப்பித்தர கசக்கிறதா? மத்திய அரசு தரவேண்டிய 2,152 கோடி ரூபாய் என்பது தமிழ்நாடு மக்கள் செலுத்திய வரிப்பணம்தானே தவிர, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இடும் பிச்சையல்ல என்பதை மோடி அரசின் மந்திரி பெருமக்கள் முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒவ்வாத உணவைத் திணித்தால் எப்படி உடல் ஏற்காது உமிழ்ந்துவிடுமோ, அப்படி ஒவ்வாத இந்தியை வலிந்து திணித்தால் தமிழ் மக்களும் உமிழ்ந்துவிடுவார்கள். இந்தி பேசாத மாநிலங்களில் முதன் முதலில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கத் தொடங்கியது காங்கிரசு அரசு. அந்தக் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கூட்டாட்சி தத்துவம், மாநில தன்னாட்சி குறித்து தி.மு.க. பேசுவது வேடிக்கையானது.

பா.ஜ.க. அரசின் புதிய கல்விக்கொள்கையை உண்மையிலேயே தி.மு.க. அரசு ஏற்கவில்லை என்றால் அதன் ஒரு கூறான இல்லந்தோறும் கல்வித் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தியது ஏன்? பிஎம் ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாக மத்திய அரசிற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்? புதிய கல்விக்கொள்கையின் நல்ல கூறுகளைச் செயல்படுத்துவோம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தது ஏன்? தேசிய கல்விக் கொள்கையை அப்படியே நடைமுறைப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டி தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் ஜவகர் நேசன் பதவி விலகியதற்கு தி.மு.க. அரசின் பதிலென்ன? பா.ஜ.க. அரசின் புதிய கல்விக்கொள்கையை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தியதன் விளைவுதான் முழுதாக ஏற்குமாறு கட்டாயப்படுத்தும் துணிவை பா.ஜ.க. அரசிற்கு அளித்துள்ளது. ஆகவே, தற்போது புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. அரசு எதிர்ப்பது போல நடிப்பது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமாகும்.

ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வையே ரத்து செய்வோம் என்று சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்த தி.மு.க. அரசால், நிதியைக்கூடப் பெற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. நாடாளுமன்றத்தில் 40 உறுப்பினர்களுக்கும் மேலாக வைத்துள்ள தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் குறைந்தபட்ச நிதி உரிமையைக்கூடப் பெற முடியாதா? சதுரங்க விளையாட்டிற்கும், கேலோ விளையாட்டிற்கும், சிலை திறக்கவும், நாணயம் வெளியிடவும் பா.ஜ.க. அரசின் மூத்த மந்திரிகளோடு நல்லுறவாடும் தி.மு.க. அரசு, அதனை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், மண்ணின் உரிமைக்கும் பயன்படுத்தாதது ஏன்?

புதிய கல்விக் கொள்கையை வலிந்து திணிக்க முயலும் மத்திய அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டு மாணவர்களுக்குச் சேர வேண்டிய நிதியை உடனடியாகத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது என்பதை வலியுறுத்தியும், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதைத் தெளிவுபடுத்தியும் உடனடியாகச் சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சிதைத்து, கூட்டாட்சி தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும் எதேச்சதிகாரப் போக்கினை கைவிட்டு தமிழ்நாட்டுப் பள்ளி குழந்தைகளுக்குச் சேர வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: