பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்தார். நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த அவரை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மீண்டும் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது.
ஆனால், இந்த தகவலை சீமான் மறுத்துள்ளார். இதுதொடர்பாக பேட்டியளித்த சீமான், "நிர்மலா சீதாராமனை சந்தித்திருந்தால் சந்தித்தேன் என நானே கூறியிருப்பேன். அவரை சந்தித்ததை சொல்வதற்கு எனக்கு என்ன பயம்?. ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கூட்டணி வைப்பதாக இருந்தால் நான் வேதாரண்யம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க போகிறேன். 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்து களப்பணியை செய்ய வைத்துள்ளேன். சின்னத்துக்காக காத்திருக்கிறேன். சின்னம் கிடைத்த உடன் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவேன். தனித்து போட்டி தான் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டேன்.
என்னுடைய கனவை இன்னொருவர் கைகளில் வைத்து நிறைவேற்ற முடியாது. என்னுடைய பயணம் எனது கால்களை நம்பித்தான் இருக்கும். அடுத்தவர் கால்களை நம்பியோ, அடுத்தவர் தோள்களை நம்பியோ இருந்தால், என்னுடைய கனவை தேடி அவர் செல்ல மாட்டார். ஆட்சி மாற்றம், ஆள் மாற்றம் எனது கனவு இல்லை. அடிப்படை அரசியல் மாற்றம் தான் எனது கனவு. அதனை நிறைவேற்ற எனது மொழியில் இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இது பெயருக்கு தான் தமிழ்நாடு, ஆனால் தமிழ்நாடு இல்லை. எல்லாத்தையும் இழந்து நிற்கிற நாங்கள் மறுபடியும் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து எதையும் சாதிக்க முடியாது." என்று தெரிவித்துள்ளார்.