தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்த சீமான், அதற்கான விளக்கத்தை தற்போது அளித்துள்ளார்.
அதன்படி, விஜய்யின் கொள்கைகளில் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக கூறிய அவர், தனது கொள்கைக்கான விளக்கத்தை விஜய் அளிப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திராவிடம் என்றால் என்ன, தமிழ் தேசியம் என்றால் என்ன என்று விஜய் விளக்கம் அளிப்பாரா என்று கேட்டுள்ளார்.
பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதை விஜய் ஏற்றுக் கொள்வாரா? என்றும், அருந்ததியினருக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்வாரா? என்றும் சீமான் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.
சமூக நீதியை தமிழகத்தில் பல ஆண்டுகளாக பேசி வரும் திமுக கூட அதனை பின்பற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டிய சீமான், பெண்ணுரிமை பேசும் திமுகவின் அமைச்சரவையில் எத்தனை பெண் அமைச்சர்கள் உள்ளனர் என்றும், சரிபாதி அளவில் பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆண், பெண் சமம், மதுக்கடை ஒழிப்பு என பல கொள்கைகளை உள்ளடக்கியது தமிழ் தேசியம் என சீமான் தெரிவித்துள்ளார். வில்லனும், கதாநாயகனும் எப்படி ஒன்றாக முடியும் எனக் கேட்ட சீமான், தம்பி என்ற உறவு வேறு, கொள்கை வேறு எனக் கூறினார். மேலும், கொள்கைகளுக்கு பெற்றோரே எதிராக இருந்தாலும், அவர்களும் எதிரி தான்; பின்னர் அண்ணன் - தம்பி உறவு எல்லாம் கிடையாது என பதிலளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“