100 நாள் வேலை திட்டத்திற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னம்மாள் மனு அளித்த சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரணையூர் கிராம மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் பணி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது.
இதன் மூலம் குளங்கள், வரத்து கால்வாய் சீரமைப்பது மற்றும் மரக்கன்றுகளை நடுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த சில நாள்களாக இந்த கிராம மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து மீண்டும் தங்களுக்கு பணி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இவர்களோடு இதே கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னமாளும் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்த வருகை தந்திருந்தார். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், அரசின் ஒப்புதல் பெறப்பட்டு 100 நாள் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையடுத்து சீமானின் தாயார் அன்னமாமாள், நாம் தமிழர் கட்சியின் கொடி கட்டி வந்த பொலிரோ வாகனத்தில் ஏறி சென்றார். 100 நாள் வேலைவாய்ப்பு கேட்டு சீமானின் தாயார் கிராம மக்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து மனு அளித்த சம்பவம் அரசியலில் பேசுபொருளானது.
இச்சம்பவம் குறித்து சீமான் தனது சார்பில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "100 நாள் வேலை திட்டத்தால் என் வீட்டில் வேலைக்கு யாரும் வருவதில்லை. என் தாயார் தனி ஆளாக நின்று வேலை பார்க்கிறார். ஊரில் இருப்பவர்கள் அழைத்ததால் என் தாயார் சென்றிருப்பார். உண்மையிலேயே 100 நாள் வேலை திட்டத்தில் பாதிக்கப்பட்ட வேளான் குடும்பங்களில், என் குடும்பத்தினரும் அடங்குவார்கள். ஒரு நாளில் 2 ஏக்கரில் அறுவடை செய்த நாங்கள், தற்போது ஒரு வாரத்தில் 1 ஏக்கர் தான் அறுவடை செய்கிறோம். விவசாய வேலைக்கு பணியாளர்கள் இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“