தன்னையும், தனது குடும்பத்தினரையும் சீமான் தூண்டுதலின்பேரில், நாம் தமிழா் கட்சியினர் சமூக ஊடகங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் சித்தரித்து கருத்துகள் பதிவிடுவதாகவும், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சீமான் முயற்சிப்பதாகவும் புகார் கூறி, திருச்சி 4-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமாா் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
நஷ்டஈடு கோரி தனிநபர் வழக்காக தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில் டிஐஜி வருண்குமாா் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து வாக்குமூலம் அளித்து இருந்தார். வருண்குமார் தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடைபெற்றது. அதில், புதுக்கோட்டை மாவட்டம், கணேஷ் நகரைச் சோ்ந்த சுயதொழில் செய்துவரும் மணிகண்டன் (36) என்பவா் ஆஜராகி, வருண்குமாா் தரப்பின் மேலும் ஒரு சாட்சியாக, சாட்சியம் அளித்தார்.
இவ்வழக்கின் புகாா்தாரர் தரப்பிலான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்ட நிலையில், இதுவரை சீமான் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், இவ்வழக்கு இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி (பொறுப்பு) பாலாஜி, சீமான் வந்திருக்கிறாரா என்றார், சீமான் நேரில் வரவில்லை என்றதும் ”இன்று மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறக்கப்படும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
இதனால், திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இன்று மாலை 5 மணிக்கு சீமான் ஆஜர் ஆகிறாரா அல்லது அவரது வழக்கறிஞர் மூலமாகக் காரணங்கள் ஏதும் மனுவாக வழங்கி வேறு ஒரு நாளில் ஆஜர் ஆவாரா என்பது சில மணி நேரங்களில் தெரியவரும். அதேநேரம், சீமான் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் நடந்துவரும் நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்