தமிழ் மக்களின் உறவுமுறைகள் குறித்து அவதூறான கருத்துகளை முன்வைத்தவர் பெரியார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது பெரியார் குறித்து பல சர்ச்சைக்குரிய விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.
குறிப்பாக, "தமிழ் மொழியை குப்பை என்றும், காட்டு மிராண்டி மொழி என்றும் பெரியார் விமர்சித்துள்ளார். தமிழை சனியன் என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார். பெரியாரின் அடிப்படையே தவறானது. திருக்குறள் குறித்து அவதூறான கருத்துகளை பெரியார் பேசி இருக்கிறார். கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர் போன்றோரை எதிரி எனக் கூறியவர் பெரியார்.
பெரியாரை கொள்கை வழிகாட்டியாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்ணிய உரிமை குறித்து தவறாக பேசியவர் பெரியார். குறிப்பாக, தாய், மகள் என உறவுகள் குறித்து அவதூறான கருத்துகளையே பெரியார் பேசியுள்ளார். இதற்கு பெயர் பெண்ணிய உரிமையா?
தன்னுடைய தோட்டத்தில் இருந்த 1000 தென்னை மரங்களை வெட்டிய பெரியார் பகுத்தறிவாதியா? நானும் ஒரு விவசாயி தான். என்னுடைய தோட்டத்தில் கள் இறக்க அனுமதி இல்லை. இதை செய்வது தான் அறிவார்ந்தவர்களின் பணி. மரத்தை வெட்டுவது அல்ல.
சமூக நீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. சமூக நீதியை போராடி பெற்றுக் கொடுத்தவர் ஆணைமுத்துவா அல்லது பெரியாரா? " என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பெரியார் குறித்து சீமானின் இத்தகைய கருத்துகள் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.