Lok Sabha Election | Seeman | Ntk | மக்களவை தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களிடத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, “இந்தியா கூட்டணிக்கு என்ன கொள்கை இருக்கிறது” என கேள்வியெழுப்பினார்.
இது குறித்து பேசிய சீமான், “இந்தியா கூட்டணிக்கு கொள்கை, கோட்பாட்டு சித்தாந்தம் என எதுவும் கிடையாது.
கேரளாவுக்குள் எதிர்கட்சி, கேரளாவுக்கு வெளியே கூட்டணி என செயல்படுகின்றனர். காவிரியில் நீர் தர முடியாது என்று கூறிய காங்கிரஸூடன் தி.மு.க கூட்டணி வைத்துள்ளது” என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா வாக்கு சேகரித்தார்.
அப்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மேகதாது திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றார்.
மேலும் பெங்களூருக்கு குடிநீர் கிடைப்பதிலும் சிக்கல் இருக்காது” என்றார். சித்த ராமையாவின் இந்தப் பேச்சுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்பட பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொ.ம.தே.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
40 தொகுதிகளிலும் நாம் தமிழர் தனித்து களம் காண்கிறது. இந்தக் கட்சி பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் (புதுச்சேரி உள்பட) 20 பெண்களுக்கு சரிநிகர போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“