தி.மு.க-வினர் தகராறு; நான் நின்றிருந்தால் அடிச்சு வெளுத்திருப்பேன்: சீமான் ஆவேசம்

நாங்களும் பொறுமையாக இருக்கின்றோம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. என்னை தொடாமல் என்னை சுற்றி இருக்கும் நபர்களை தொட்டு என்னை காயப்படுத்துகின்றனர் என்றும் அவர் பேசியுள்ளார்.

Seeman in Kolathur, Chennai news, Tamil Nadu news,
கொளத்தூர் மக்களை சந்தித்து பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

கொளத்தூர் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களை முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடினார்.

வீடுகளை இடித்துவிட்டார்கள், முன்னறிவிப்பு கொடுத்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு இடித்திருக்கலாம். வீதியில் நிற்பதை காணும் போது கஷ்டமாக இருக்க்கிறது. வசதிக்காக பாலம் கொண்டு வந்தாலும் வீடுகளை இழந்துவிட்டு மக்கள் நிற்பது கவலை அளிக்கிறது. திடீரென இடித்தது முறையாக இல்லை. அரசு கவனத்தில் எடுத்து பாதுகாப்பாக மக்களை வெளியேற்றிவிட்டு இடித்திருக்கலாம். மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். இழப்பீடு தரவில்லை. மாற்று இடமும் தரவில்லை. இந்த நடவடிக்கையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது ”நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என்பதே வேடிக்கையாக இல்லையா? வெள்ள நிவாரணத்திற்காக பல இடங்களுக்கு சென்றேன். இது போன்று தான் பல வீடுகளையும் இடித்துள்ளார்கள். ஆக்கிரமிக்கும் போது என்ன செய்தீர்கள், வீட்டுமனை, எரிவாயு இணைப்பு, குடிநீர், மின் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தும் கொடுத்திருக்கிறார்கள். வரி வாங்கியுள்ளார்கள் அப்போதெல்லாம் அது ஆக்கிரமிப்பு என்று தெரியவில்லையா? இரண்டு கட்சிகள் தான் ஆட்சி செய்தனர். ஆட்சியின் போது அரசு ஆக்கிரமித்து கொடுத்த பகுதிகளில் தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மக்களாக எப்படி போய் குடியேறுவார்கள்?”என்று கேள்வி எழுப்பிய சீமான், வள்ளுவர் கோட்டம் எதில் அமைந்திருக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பினார்.

ஆக்கிரமிப்பு என்பது வெட்டி பேச்சு. நீதிமன்றங்கள், அரசு குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் நீர் நிலைகளில் தான் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். மக்களை பழி சொல்லி பயன் இல்லை. தடுத்திருக்க வேண்டும். இது நீர்நிலைகள் இங்கே ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என்று கூறியிருந்தால் அவர்கள் சென்றிருப்பார்கள்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுத்து அவர்களை பாதுகாப்பாக வேறொரு குடியிருப்பு பகுதியில் அமர்த்தியிருக்கலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நோட்டீஸ் வந்தது என்று கூறியுள்ளனர். 50 – 60 ஆண்டுகளாக அவர்கள் வசித்து வருகின்றனர். அந்த நிலத்தின் மதிப்பிற்கு இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும் என்றார்.

கொளத்தூர் தொகுதி பிரச்சனையை தவிர்த்து, நீண்ட காலமாக சிறைகளில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்வது குறித்த திமுகவின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்தார். மதம் சார்ந்து ஒரு பிரச்சனையை அணுகுவது சரியான முறை இல்லை என்றும் கூறினார்.

தர்மபுரி மாவட்டத்தில் நாதகவினரை திமுக தொண்டர்கள் தாக்கியது தொடர்பாக பேசிய அவர் “நாங்கள் ஒரு கூட்டம் நடத்துகிறோம். விருப்பம் இருந்தால் கேட்டிருக்கலாம். இல்லையென்றால் சென்றிருக்கலாம். தகராறு செய்வது தான் திமுக. இப்படி தான் அக்கட்சி இருக்கும். ”சின்ன பசங்க” என்பதால் இப்படி தாக்கியுள்ளனர். ஒரு வேளை நான் நின்றிருந்து பேசியிருந்தால், செருப்பைக் காட்டியதோடு இல்லாமல் அடித்து வெளுத்திருப்பேன்” என்று சிரித்தவாறே சீமான் கூறினார்.

சாட்டை துரைமுருகன் என்ன செய்துவிட்டார்? தொடர்ந்து அவரைப் பிடித்து சிறையில் போடுகின்றனர். நாங்களும் பொறுமையாக இருக்கின்றோம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. என்னை தொடாமல் என்னை சுற்றி இருக்கும் நபர்களை தொட்டு என்னை காயப்படுத்துகின்றனர் என்றும் அவர் பேசியுள்ளார். நாதக உறுப்பினர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். கருத்தை கருத்து ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் சமீபத்திய காலங்களில் நடைபெற்ற மாரிதாஸ் போன்றோரின் கைது குறித்தும் அவர் பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Seeman in kolathur talks about why his supporters got arrested

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com