Advertisment

பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் - சீமான் அறிக்கை

தனது மகனையே முழு உளவியல் பலமாகக் கொண்டிருக்கிற தந்தை குயில்தாசனுக்குத் பேரறிவாளன் அருகாமையில் இருப்பதே அவரை நோயிலிருந்து மீண்டுவரச் செய்யும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் - சீமான் அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிக்குண்டு தான்செய்யாத குற்றத்திற்காகக் கால்நூற்றாண்டுக்கு மேலாய் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கிற என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளசிறைவிடுப்பை நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று எமது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். இக்கோரிக்கையைக் கனிவோடு பரிசீலிக்க வேண்டியது தமிழக அரசின் இன்றியமையாதக் கடமையாகும். அதற்காக அவர் முன்வைக்கும் காரணங்கள் மிக மிக நியாயமானவையாகும்.

Advertisment

இவ்வழக்கில் கொல்லப்பட்டது இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி என்பதினாலேயே, அனைத்து விதிகளும், மரபுகளும், சட்டங்களும் மீறப்பட்டிருக்கிறது. இராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு மின்கலன் வாங்கிக்கொடுத்தார் என்று குற்றஞ்சுமத்தி தம்பி பேரறிவாளனை சிறையில் அடைத்துவைத்திருக்கிற சட்டமும், அதிகாரமும், அந்த மின்கலனைக் கொண்டுதான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்று எந்த இடத்திலும் நிறுவவில்லை. மேலும், இராஜீவ் காந்தியைக் கொல்ல தயாரிக்கப்பட்ட பெல்ட் பாமைத் தயாரித்தவர் யாரென்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வழக்கில், தம்பி பேரறிவாளனின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்த புலனாய்வுத்துறை அதிகாரி தியாகராஜன், பேரறிவாளனின் வாக்குமூலங்களைத் தான் முழுமையாகப் பதிவுசெய்யவில்லையென்றும், அவ்வாறு பதிவுசெய்திருந்தால் பேரறிவாளன் விடுதலையாகிருப்பார் என்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளதோடு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட பிரமாணப் பாத்திரத்திலும் அதனைக் குறிப்பிட்டிருக்கிறார். இவற்றின்மூலம் தம்பி பேரறிவாளன் பக்கமிருக்கும் நியாயத்தையும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் அறிந்து கொள்ளலாம்.

26 ஆண்டுகளாய் சிறையில் இருந்த தம்பி பேரறிவாளன் சிறைக்கொட்டடியைப் பல்கலைக்கழகம் போல மாற்றி தான் ஒரு பேராசிரியனாய் போல மற்ற கைதிகளுக்கு பாடம் கற்பித்திருக்கிறார். ஒழுக்கத்திலும்,நன்னடத்தையிலும் மற்ற கைதிகளுக்கு முன்மாதிரியாக விளங்கியிருக்கிறார். சிறைக்குள்ளேயே படித்து ஏராளமான பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றிருக்கிறார். மற்ற கைதிகளும் பட்டம் பெறுவதற்கு ஊக்கமளித்து ஊன்றுகோலாய் விளங்கியிருக்கிறார். கால்நூற்றாண்டு சிறைவாசத்தில் ஒரு சிறுபிழைகூட காணாத முடியாதவகையில் சிறைவிதிகளையும், மரபுகளையும் காத்திருக்கிறார். இவற்றையெல்லாம் சொல்லிதான் தெரிய வேண்டும் என்றில்லை; நாடறியும். ஏடறியும்.

செய்யாதக் குற்றத்திற்காக தனது மகன் சிறைக்கொட்டடிக்குள்ளே அடைக்கப்பட்டதால் உடலும், மனதும் தளர்ந்து போயிருக்கிறார் அப்பா குயில்தாசன். கால்பாதம் தேய்கிற அளவுக்குத் தள்ளாத வயதிலும் தனது மகனின் விடுதலைக்காக தமிழக வீதிகள்தோறும் ஓடிச்சென்று தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகேட்டு நிற்கிறார் என் தாய் அற்புதம்மாள். 19 வயதில் சிறைக்குள்ளே சென்ற என் தம்பி அறிவு தனது இளமையையெல்லாம் சிறைக்குள்ளே தொலைத்துவிட்டு இன்னும் நீதியையும், சட்டத்தையும் நம்பிப் போராடிக்கொண்டிருக்கிறார். என் தாயும், தம்பியும் முன்னெடுத்த 26 ஆண்டுகாலப் போராட்டத்திற்கும், ஏற்பட்டப் பெரும்காயத்திற்கும் சிறுமருந்திடுவது போல இரு மாதங்கள் தமிழக அரசு சிறைவிடுப்பு அளிக்கப்பட்டிருப்பதை மனதார வரவேற்கிறேன்.

தந்தை குயில்தாசன் அவர்களின் உடல்நலனைக் கருத்திற்கொண்டுதான் தம்பிக்குச் சிறைவிடுப்பு வழங்கப்பட்டது. ஆனால், இன்னும் அவரின் உடல்நிலை முழுமையாகக் குணமடையவில்லை. நிராதரவான அந்தத் தகப்பனுக்கு தனது மகன் தன் பக்கத்திலேயே இருக்கிறார் என்பது மிகப்பெரிய மனவலிமையைக் கொடுத்து நோயிலிருந்து மீண்டுவர உதவும் என்பதை அரசு அறிந்துதான் அதனை வழங்கியது. ஆனால், அவருக்குக் குணமாவதற்குள்ளேயே தம்பியின் விடுப்பு நாட்கள் முடியவிருக்கிறது. சிறைவிடுப்பு என்பது ஒரு சலுகை அல்ல; அது ஒரு சிறைவாசியின் தார்மீக உரிமை.

26 ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் சிறைவிடுப்பை விரும்பாமல், ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்ற புரட்சியாளர் பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சிமொழி போல தன்னைக் குற்றமற்றவன் எனச் சட்டம் அங்கீகரித்து விடுதலைசெய்யும்வரை வெளியே வர மாட்டேன் என மனவுறுதி பூண்டிருந்த தம்பி அறிவை தந்தையின் உடல்நிலையே சிறைவிடுப்புக்கு சம்மதிக்க வைத்தது.

தனது மகனையே தனது முழு உளவியல் பலமாகக் கொண்டிருக்கிற தந்தை குயில்தாசனுக்குத் தம்பி பேரறிவாளன் அருகாமையில் இருப்பதே அவரை நோயிலிருந்து மீண்டுவரச் செய்யும் ஆகச்சிறந்த மருந்தாக அமையும். ஒருவேளை, தந்தையைப் பிரிந்து பேரறிவாளன் இப்போது சிறைதிரும்பும் சூழல் ஏற்பட்டால் அது அப்பாவுக்கு தாங்கொணாத் துயரத்தையும், மிகப்பெரிய மனச்சோர்வினையும் தரும். அது அவரது உடல்நலனுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

எதற்காகத் தம்பி பேரறிவாளனுக்கு விடுப்பு தரப்பட்டதோ அதற்கான காரணம் இன்னும் அப்படியே இருப்பதால் சிறைவிடுப்பைத் தமிழக அரசானது நீட்டிக்கச் செய்வதுதான் இந்நேரத்தில் முன்னெடுக்கிற சிறந்த நடவடிக்கையாக இருக்க முடியும். அப்போதுதான், ஏழு தமிழரின் விடுதலைக்காய் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சட்டப்போராட்டம் நடத்திய அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சியைத் தொடர்வதாகக் கூறுவது சாலப்பொறுத்தமாய் இருக்கும் என்பதனையும், 161வது சட்டப்பிரிவினைப் பயன்படுத்தி எக்கணமும் எழுவரையும் விடுதலை செய்யும் வரலாற்று வாய்ப்பு தமிழக அரசின் பொற்கரங்களிலேதான் இன்னும் இருக்கிறது என்பதனையும் நினைவூட்டி, விடுதலையை அடையும்வரை தம்பி பேரறிவாளனின் சிறைவிடுப்பை நீட்டிக்கச் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை கோருகிறேன்" என்று தனது அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment