அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்காகவே தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்து தி.மு.க-வில் இருந்து விலகினார்.
ஆனால், சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க-வில் இருந்து விலையகியது ஏன் என்ற கேள்வி தமிழக அரசியலில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு எழுதிய கடிதத்தில், நூறு நாள் வேலை திட்டத்கில் உள்ள குறைகளை தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றதால் விலகியதாக அறிகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு சீமான் எழுதிய கடிதத்தில், கூறியிருப்பதாவது: “எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு, 'சிறு வயதிலிருந்தே உங்களுடைய பெருமைகளை அறிந்த மகன் நான். அரசியல் துறையில் ஒரு தன்மானமிக்க தமிழச்சியாக நீங்கள் மிளிர்வதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன். உங்களை ‘அம்மா’ என்று அழைப்பதில் பேருவகைக் கொள்கிறேன். விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்த அனைவரும் உங்களை ‘சுப்பக்கா 'என்று பாசத்தோடு அழைத்த அந்தக் காலகட்டத்தில் உங்களின் அருமை எனக்குப் புரியவில்லை.
ஆனால் இப்போதுதான் நீங்கள் எப்பேர்ப்பட்ட கொள்கை உறுதிகொண்ட பெண்மகள் என்பதையும், எவ்வளவு போற்றுதலுக்குரியவர் என்பதையும் உணர்கிறேன். உங்களை இழந்ததற்கு திமுகதான் வருந்தி, திருந்த வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ள குறைகளை நீங்கள் திமுக தலைமையின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற காரணத்தாலேயே உங்களுக்கு நெருக்கடிகள் அளிக்கப்பட்டதாக அறிகிறேன். உங்கள் கருத்தோடு நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். இந்த வேலைத் திட்டத்தால் நம் தமிழினமே பெரும் அழிவைச் சந்திக்கும் நிலையில் உள்ளதை நன்றாக உணர்கிறேன். எனவே எந்தக் காலத்திலும் உங்கள் மகன் உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுகவை விட்டு வெளியேறிவிட்டதால், தனியொரு பெண்மகள் என்று தயங்காமல் உங்கள் கருத்துக்களைத் துணிவுடன் எடுத்துக்கூறுங்கள். பாஜகவை விமர்சிக்க திமுகவில் இருப்பது தடையாக உள்ளது அதனால் நான் விலகி சுதந்திரமாக தனித்து நின்று விமர்சிப்பேன் என்ற உங்களது கொள்கை உறுதியை கண்டு வியக்கிறேன். உங்களைப் போன்ற தாய்மார்கள் இன்னும் இந்த மண்ணில் இருப்பதினால்தான் இன உணர்வும், மான உணர்வும் மங்காது மலர்கிறது.
இயக்கத்தில் இருந்தபோதும் தனித்த பேராற்றல் நீங்கள். தனித்து இருந்தாலும் மாபெரும் இயக்கம் நீங்கள். உலகெங்கும் உள்ள தமிழர்கள் உங்களைக் கொண்டாடக் காத்துள்ளார்கள்.
உங்களுடைய மகன் என்பதில் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். உங்களுடைய தன்மான உணர்வுக்கும், தமிழ் உணர்வுக்கும் நான் தலை வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.மு.க-வில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கடிதம் எழுதியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.