/indian-express-tamil/media/media_files/2025/01/24/mqot4W269nCwhrzOSs8M.jpg)
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்த மாற்று கட்சியின் நிர்வாகிகள் பெரியார் சிலையை நினைவுப் பரிசாக வழங்கியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கடந்த சில நாட்களாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இது தொடர்பாக அவர் மீது தமிழகம் முழுதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு, 70 மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தனது கருத்தை வாபஸ் பெறப்போவதில்லை என்று உறுதியாக இருக்கும் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
இந்நிலையில், பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வரும் சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் பெரியார் ஆதரவு அமைப்புகள் மற்றும் மே 17 இயக்கத்தினர் ஈடுபட்டனர். அப்போது இதனை தடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டின் முன்பு திரண்டு இருந்தனர். அவர்கள் கைகளில் உருட்டு கட்டையுடன் திரண்டு இருந்தனர்.
இது தொடர்பாக சீமான் மீது நான்கு பிரிவுகளின் சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக உருட்டுக் கட்டைகளுடன் காத்திருந்ததாக 150 ஆண்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை தாக்குவதற்காக சீமான் வீட்டில் அக்கட்சி நிர்வாகிகள் குவிந்திருந்ததாக பெரியார் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தி.மு.க-வில் இணைந்த நா.த.க-வினர்
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 2000 பேர் இன்று அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைந்துள்ளனர். மாற்றுக் கட்சியை சேர்ந்த 3000 பேர் தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 51 முக்கிய நிர்வாகிகள் உள்பட சுமார் 2,000 பேர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர்.
சீமான் மீது அதிருப்தி காரணமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி தி.மு.க-வில் இணைவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியிலிருந்து ஒரு மண்டல செயலாளர் மற்றும் 6 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் இன்று தி.மு.க-வில் இணைந்துள்ளனர். வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி வருவது சீமானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி பேச்சு
மாற்று கட்சியினர் தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "தேர்தல் காலங்களில் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிரணியில்தான் அனைவரும் ஒன்று சேர்வார்கள். ஆனால், இன்று எதிர்க்கட்சியில் இருந்த நீங்கள், ஆளுங்கட்சியில் உங்களை இணைத்துள்ளீர்கள் என்றால் 2026 தேர்தல் முடிவுகள் உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடிய ஒன்றுதான்
இதை பார்க்கும் போது எதிர்க்கட்சியினருக்கு வயிற்று எரிச்சல் வரத்தான் செய்யும். அதற்காகவே மீண்டும் உங்களுக்கு பாராட்டும், வாழ்த்தும். நீங்கள் கழகத்தின் கொள்கையை ஏற்று இயக்கத்தில் சேர்ந்திருக்கின்றீர்கள். திமுக இன்று 75வது ஆண்டில் பவள விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் வந்து விட்டீர்கள், ஆனால் உங்களைப்போல ஆயிரக்கணக்கானோர் வருவதற்கு சில தயக்கத்தோடு அங்கு இருப்பார்கள். அவர்களிடம் எடுத்துச் சொல்லி, அத்தனை பேரையும் கழகத்தில் இணைக்க வேண்டிய முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்." என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.