நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக தெரிவித்தார். இதையடுத்து, சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 17 ஆம் தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சம்மன்
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக கோரி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் போலீஸ் நிலையத்தில் கடிதம் அளித்தார்.
இதையடுத்து, நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கில், நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என கூறி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியுள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
கிழிப்பு
சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில், சீமான் வீட்டிலிருந்து வெளியே வந்த நா.த.க நிர்வாகி ஒருவர் சம்மனை கிழித்து எறிந்தார். இதனையைடுத்து, போலீசார் வீட்டிற்குள் சென்று அந்த நபர் குறித்து விசாரிக்க சென்றனர். அப்போது அங்கு இருந்த சீமான் வீட்டு காவலாளி போலீசாரை தடுத்தி நிறுத்தி வாக்குவாதம் செய்தார். மேலும் அவர் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் காவலாளியை போலீசார் குண்டுக் கட்டாக கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் சம்மனை கிழித்த நபரையும் போலிசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, சீமான் வீட்டில் நடந்த சலசலப்புக்கு அவரது மனைவி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
துப்பாக்கி பறிமுதல்
இந்நிலையில், சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரத்தில், விசாரணைக்கு வந்த போலீசாரை சீமான் வீட்டின் காவலாளி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, காவலாளி சுபாகர், அமல்ராஜ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் இருந்து 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ராணுவ வீரரான அமல்ராஜ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். நா.த.க-வில் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக சீமான் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு முதல் லைசன்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார். எனினும், தனிப்பட்ட பாதுகாப்புக்காக பெறப்பட்ட துப்பாக்கியை, சட்ட விரோதமாக தொழில் ரீதியாக அவர் பயன்படுத்தி வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.