பெரியார் குறித்து தான் கூறிய கருத்துகள் தவறு என ஒருவர் நிரூபித்தால் கூட, தான் மன்னிப்பு கேட்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது பெரியார் குறித்து அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சீமான், "பெரியாரை எதிர்ப்பது ஆரியத்திற்கு துணையாக இருக்கும் எனக் கூறுகிறார்கள். ஆனால், இராஜாஜி உள்ளிட்ட பலருடன் பெரியார் நட்புணர்வுடன் இருந்தார். அவர்களுடன் கூட்டணியில் இருந்தார். வள்ளலார், வைகுண்டரை தவிர சீர்திருத்தவாதி இந்த மண்ணில் யாரும் இல்லை.
இப்போது வரை வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை தர முடியவில்லை. இதில் பெரியாரை போற்றுவதற்கு அவசியம் என்ன இருக்கிறது. பெரியார் அப்படி என்ன செய்துவிட்டார். பெரியார் எந்த சமூகத்திற்கு நீதியை நிலைநாட்டினார் என அவரை போற்ற வேண்டும்.
தி.மு.க-வில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட்டுள்ளதா? பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டும் தான் உரிமை உள்ளது. பாரதியார் கூட தான் பெண் உரிமை குறித்து பாடி இருக்கிறார். எதற்காக பெரியாரை நாம் போற்ற வேண்டும்.
பெண்கள் கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் எனவும், அதுவே பெண் விடுதலை என்றும் பெரியார் பேசினார். அவரை பின்பற்றுபவர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா? அம்பேத்கரையும், பெரியாரையும் சமமாக ஒப்பிடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
அம்பேத்கரும், பெரியாரும் ஒரே கொள்கையில் ஒத்துப்போகிறார்கள் என நிரூபித்துவிட்டால் நான் மன்னிப்பு கேட்கிறேன். இதனை அனைவருக்கும் சவாலாக விடுக்கிறேன். நான் பேசிய கருத்துகளில் உண்மை இல்லை எனவும், போலி எனவும் கூறுகிறார்கள்.
பெரியாரின் கோட்பாடுகளை அனைவரும் படிக்கும் வகையில் பொதுவெளியில் வெளியிட வேண்டும். அதனை மக்கள் படித்த பிறகும் பெரியாரை போற்றினால், நான் மன்னிப்பு கேட்கிறேன்.
இத்தனை அரசியல் கட்சிகளில் ஒருவராவது பெரியாரின் சித்தாந்தங்களை பேசி வாக்கு சேகரிக்க தயாராக இருக்கிறார்களா?" எனத் தெரிவித்துள்ளார்.