Advertisment

உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் தங்கலான்; பா. ரஞ்சித்துக்கு சீமான் பாராட்டு

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தியுள்ள தங்கலான் திரைப்படம் உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது என்று சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
seeman pa ranjith

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தங்கலான் திரைப்படத்தையும் இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் படக்குழுவினரையும் பாராட்டி அறிக்கை வெளியிட்டிருப்பது கவனத்தை பெற்றுள்ளது.

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக உள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,  ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தியுள்ள தங்கலான் திரைப்படம் உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது என்று சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தி, இயக்கம், இசை, நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை, தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் ஆகச்சிறந்த படைப்பாக உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களுக்கும், பறிக்கப்பட்ட அவர்களது உரிமை மீட்புக்கும், நல்வாழ்விற்கும் என தனது ஒப்பற்ற கலைத்திறனை அர்ப்பணித்துள்ள அன்புத்தம்பி பா. ரஞ்சித் அவர்களுக்கும், நடிப்புக்கலையில் தான் கொண்டுள்ள அளவற்ற காதலாலும், தனித்திறனாலும் தான் ஏற்ற பாத்திரத்திற்கும், கதைக்களத்திற்கும் ஏற்ப தனது உடலை வருத்தி, திருத்தி வெளிப்படுத்தியுள்ள அசாத்திய நடிப்பாற்றலால் காட்சிகளில் நம்மை ஒன்றச் செய்துள்ள பெருங்கலைஞன் அன்புத்தம்பி விக்ரம் அவர்களுக்கும், வரலாற்றுப்பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மண் மனம் மாறாத மக்களிசையாலும், வீரம் தெறிக்கும் போர்ப்பறையிசையாலும் காட்சிகளுக்கு வலிமைசேர்த்துள்ள என் ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும், குருதி தோய்ந்த தங்கச்சுரங்கங்களில் மறைக்கப்பட்ட வரலாற்றை உணர்வுச்சூடேற்றும் திரைக்கதை மற்றும் உரையாடல்களாக வார்த்துள்ள அன்பிற்கினிய எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், தமிழ் பிரபா ஆகியோருக்கும், வரலாற்றுக்காலத்தை அதன் விழுமியங்களோடு கண் முன்னே கொண்டு வந்துள்ள கலைஇயக்குநர் தம்பி மூர்த்தி அவர்களுக்கும், அதனை உலகத்தரத்தில் ஒளிஓவியமாக வடித்துள்ள ஒளிப்பதிவாளர் அன்புத்தம்பி கிஷோர்குமார் அவர்களுக்கும், படத்தொகுப்பாளர் தம்பி செல்வா அவர்களுக்கும், தங்கலான் திரைப்படத்திற்கு கடின உழைப்பையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள அனைத்து திரைக்கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்எனது அன்பும், பாராட்டுகளும்.

வருகின்ற 15-08-2024 அன்று வெளியாகவிருக்கும் தங்கலான் திரைப்படத்தை உலகெங்கும் பரவிவாழும் என் உயிர்க்கினிய அன்னைத்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் திரையரங்கங்களுக்குச் சென்று கண்டு களித்து, மாபெரும் வெற்றியடையச் செய்து, மேலும் இதுபோன்ற ஆகச்சிறந்த படைப்புகள் தமிழில் உருவாகத் துணை நிற்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

19-ம் நுற்றாண்டில் கோலார் தங்கவயலில் தங்கம் எடுப்பதற்கு சுரங்கப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட தலித் மக்களின் வாழ்க்கையையும் வலியையும் அவர்களின் வாழ்வியலையும்  பற்றி பேசும் தங்கலான் திரைப்படம் மீது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் போக்கை இயக்குனர் பா. ரஞ்சித் வருகைக்கு முன், பா. ரஞ்சித் வருகைக்குப் பின் என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாமல் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. தலித்துகளின் வாழ்க்கையும் அவர்களின் வாழ்வியலும் கொண்டாட்டமும் அரசியலும் தமிழ் சினிமாவில் கதைகளாக பேசுபொருளாகியுள்ளன. 

அந்த வகையில், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம் மிகுந்த பொருட் செலவிலும் கடின உழைப்பிலும் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன், நடிகை பார்வதி, நடிகர் பசுபதி, ஹரி, ஹாலிவுட் நடிகர் டானியல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை கிரீன் ஸ்டுடியோஸ் ஞானவேல் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தங்கலான் திரைப்படம் சுதந்திர தினத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சீயான் இதுவரை தான் நடித்த படங்களிலேயே பல மடங்கு உழைப்பை கொடுத்துள்ள படம் என்று பாராட்டியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள இயக்குனர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில்,  “உங்கள் அன்புக்கு நன்றிகள் அண்ணா” என்று குறிப்பிட்டு நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் பக்கத்தை டேக் செய்துள்ளார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தங்கலான் திரைப்படத்தையும் இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் படக்குழுவினரையும் பாராட்டி அறிக்கை வெளியிட்டிருப்பது கவனத்தை பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pa Ranjith Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment