வங்கக்கடலில் உருவான ஃபீஞ்சல் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால், அதிகனமழை பெய்தது. இதனால் அந்த 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மேலும் இந்த புயல் காரணமாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டியதால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டதால், மலையடிவாரத்தில் இருந்த ஒரு வீட்டை மண் மூடியது. அந்த வீட்டில் இருந்த 7 பேர் உயிரோடு புதைந்து பலியானார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு ஏற்பட்டு, மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
உதவி
இந்நிலையில், சென்னையில் புயல் மற்றம் கனமழையால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களை த.வெ.க தலைமை அலுவலகமான பனையூருக்கு நேரில் வரவழைத்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை நேற்று செவ்வாய்க்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழங்கினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் தனித்தனியாக குறைகளை கேட்டறிந்தார்.
பாராட்டு
இந்த நிலையில் , விஜய் பனையூரில் நிவாரணம் வழங்கியது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "விஜய்யால் களத்தில் நிற்க முடியாது. பிரச்சினை இருக்கிறது. அவர் களத்திற்கு போனால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டத்தை விட, அவரை பார்க்க வேண்டும் என்ற கூட்டம் அதிகமாக வந்துவிடும். அந்த பிரச்சினையை வேறு சமாளிக்க வேண்டும். விஜய்க்கு நேரில் அழைத்தாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே. அதை பாராட்ட வேண்டும்." என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சீமான், " தமிழக அரசின் நடவடிக்கை மழை வெள்ளத்திற்குள் மூழ்கிவிட்டது. 3 மாதத்திற்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இப்போது இல்லை. அந்தப் பாலத்தின் தரம் போல் தான் ஆட்சியின் தரமும் இருக்கிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“