நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்படி சீமான் நேற்று இரவு வளசரவாக்கம் போலீசில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து வளசராக்கம் ஆய்வாளர் மற்றும் இணை ஆணையர் விசாரணை மேற்கொண்டனர்.
சீமானிடம் போலீசார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தினர். அவரிடம் மொத்தம் 53 கேள்விகளை காவல்துறையினர் கேட்டுள்ளனர். விசாரணை முடிந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, “மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பேன் என்றும், விசாரணையில் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளையே போலீசார் கேட்டதாகவும் அவர் கூறினார்.
3 மாத காலம் அவகாசம் இருந்த நிலையில் 3 நாட்களில் விசாரணையை முடிக்க நினைத்தது ஏன்? என்றும் காவல் துறையினருக்கு தமிழக அரசு தரப்பில் இருந்து அழுத்தம் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவு ஏற்படுத்த நினைத்தவர்களுக்கு தான் பின்னடைவு என்றும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த பிரச்னை மீண்டும் வந்ததாகவும், வீட்டில் ஒட்டப்பட்டிருந்த சம்மனை கிழித்தால் கைது செய்வீர்களா என்றும் சீமான் கூறினார்.