சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்தும் மாணவர்கள் மற்றும் பல அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் ஆர்ப்பாட்டம் நடத்த நாதக நிர்வாகிகளுக்கு சீமான் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அனுமதியின்றி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த வந்த நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததையடுத்து பேட்டி அளித்துக்கொண்டிருந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் போலீசார் கைது செய்தனர்.
”வள்ளுவர் கோட்டத்தில் புதிதாக ஒன்றும் நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. பலமுறை போராட்டம் நடத்தியிருக்கிறோம்.இதற்கு முன் போராட்டம் நடத்தியபோது ஏற்பட்ட போக்குவரத்து இடையூறு என்ன?” என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“