தேனி மாவட்டம், போடி அருகே கால்நடைகளுக்கு மேய்ச்சல் நில உரிமை கோரி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய சீமான், மாடுகளை மேய்க்க மலைப் பகுதிக்கு சென்றபோது வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், சீமானுக்கும் வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்படுகின்றன. கால்நடை வளர்ப்பவர்கள் மேய்ச்சலுக்காக கால்நடைகளை வனப்பகுதிகளுக்கு ஓட்டிச்செல்லும்போது, வனத்துறையினர் பல கட்டுப்பாடுகளை விதித்து கால்நடைகளின் மேய்ச்சலுக்கு அனுமதி மறுத்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த தன்னாசி என்பவர் மாடு மேய்க்க சென்றபோது வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சர்ச்சையானது. இதையடுத்து, இவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து முறையிட்டார்.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த மாதம் மதுரை அருகே கால்நடைகள் மாநாடு நடத்தினார். அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் பட்டியில் அடைக்கப்பட்டு சீமான் பேசினார். அதில், போடிநாயக்கனூரில் வனத்துறையினரின் தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்துவேன் என்று அறிவித்தார்.
இந்நிலையில், தேனி மாவட்டம், போடி அருகே கால்நடைகளுக்கு மேய்ச்சல் நில உரிமை கோரி மாடு மேய்க்கும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தினார். போராட்டத்தின்போது மேடையில் பேசிய சீமான், “ஆடு மாடுகள் சென்று மேய்வதால் காடு வளப்படும். குரங்கனில் காடு பற்றி எரிந்தது போல, காடு தீ பறி எரியாமல் தடுக்கப்படும்.” என்று கூறினார்.
மேலும், “கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஒரு தீவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருக்கிறது. அந்த தீவில் உள்ள காடு தீப்பற்றி எரியாமல் இருப்பதற்காக தினமும் 100 மாடுகளை விட்டு அந்த காட்டில் உள்ள புற்களை மேய விடுகிறார்கள்” என்று கூறினார். மேலும், தேனியில் குரக்கனியில் உள்ள மலையை நியூட்ரினோ ஆய்வுக்காக எடுத்துக்கொடுத்தவர்கள் இவர்கள்தான் (தி.மு.க) என்று சீமான் கூறினார்.
இந்தியாவில் எத்தனையோ மலைகள் இருக்கும்போது என்னுடைய மலைக்கு ஏன் வந்தார்கள். 50,000 டன் எடையுள்ள வெடிமருந்துகளை வைத்து மலையைத் தகர்ப்போம் என்றும் லட்சம் டன் தூசி காற்று மண்டலத்தில் கலக்கும் என்று ஆய்வில் கூறுகிறார்கள் என்று கூறிய சீமான், கல்குவாரி என்ற பெயரில் வெடிவைத்து பாறைகளை விற்று காசாக்கி மலைகளை நாசமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆடு, மாடுகள் புற்களை மேய்ந்தால் மலை நாசமாகிவிடும் என்று கூறுகிறார்கள் என்று சீமான் கடுமையாக சாடினார்.
இதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போடிநாயக்கனூர் மலைப்பகுதியில் 300 மாடுகளுடன் மேய்ப்பதற்காக சென்றார். அப்போது, வனத்துறையினர் தடுப்புகளை அமைத்து சீமானை தடுத்து நிறுத்தினர். இதனால், சீமான் ஏன் மாடு மேய்க்க செல்லக்கூடாது என்று கேள்வி எழுப்பி வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், சீமான் தடையை மீரி தடுப்புகளை அகற்றி மாடு மேய்க்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.