நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக தெரிவித்தார். இதையடுத்து, சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 17 ஆம் தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சம்மன் கிழிப்பு
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக கோரி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் போலீஸ் நிலையத்தில் கடிதம் அளித்தார்.
இதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை சீமான் ஆஜராக வேண்டும் என கூறி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். அந்த சம்மனை சீமான் வீட்டின் பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார்.
இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்காமல் போலீசாரை தடுத்து நிறுத்திய வீட்டின் காவலாளியும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். இதனால், வீடு முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்மனை கிழித்தது தொடர்பாக சீமான் மனைவி கயல்விழி விளக்கம் அளித்துள்ளார்.
சீமான் கேள்வி
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "காவல் துறையின் சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம். அதற்காக கைது செய்வீர்களா? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையிலா மாட்ட முடியும்?; சம்மனை கிழிப்பது அவ்வளவு பெரிய குற்றமா?
ஒசூர் வந்து என்னிடம் போலீசார் சம்மன் வழங்க மாட்டார்களா? சம்மனை வீட்டில் ஒட்டியதோடு, போலீசாரின் வேலை முடிந்தது. போலீசார் கதவில் சம்மனை ஒட்டியதன் நோக்கம் என்ன? நீலாங்கரை காவல் ஆய்வாளர் வீட்டுக்கு வந்து காவலாளியை அடித்து இழுத்துச் சென்றது ஏன்?
காவலாளியை இவர்கள் அடித்து விட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். விசாரணைக்கு வரமாட்டேன் என்று நான் சொல்ல்வே இல்லை. ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி உள்ளதால் முடித்துவிட்டு மாலையில் விசாரணைக்கு ஆஜராவேன். காவல்துறை ரொம்ப விருப்பபடுவதால் இன்று ஆஜராவேன். மாலை 6 மணிக்கு போவேன். மீண்டும் நான் ஆஜரானாலும் ஏற்கெனவே சொன்னதைதான் சொல்ல வேண்டும்.
அண்ணா பல்கலை.மாணவி வழக்கில் என்ன நடவடிக்கை காவல்துறை எடுத்துள்ளது? அண்ணா பல்கலை. வழக்கில் யார் அந்த சார் என்பதை கண்டுபிடித்துவிட்டீர்களா? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை என்ன விசாரணை நடத்தி உள்ளது?
என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால், பாலியல் வழக்கை கையிலெடுக்கிறார்கள் என்னை சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்த பெண்ணை அழைத்து வருகிறது. அந்த பெண் பாலியல் புகார் கூறினால் குற்றாமாகி விடுமா? விருப்பமில்லாத பெண்ணை நான் வன்கொடுமை செய்ததுபோல் பேசுகின்றனர். ஒரு பெண் என் மீது புகார் கொடுதாலே அது குற்றம் ஆகிவிடுமா? புகார் மீது விசாரணை நடத்திய பின் தானே குற்றம் நடந்ததா என்பது தெரியும். நடிகையை அச்சுறுத்தி நான் 7 முறை கருக்கலைப்பு செய்தேனா? அது உண்மையென்றால் அதுவும் ஒரு சாதனையே.ஓராண்டில் ஏழு முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளரும் நான்தான். பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நடிகையை நேருக்கு நேர் சந்திக்க தயார், நேரில் வர சொல்லுங்கள்.
தமிழ்நாட்டிலேயே அதிக வழக்குகளை சந்தித்த என் மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. 2026 தேர்தலில் மோதி பார்க்கலாம், 234 தொகுதிகளிலும் தி.மு.க.வால் தனித்து போட்டியிட முடியுமா? என்னைப்போன்று தனித்து நின்று என்னை எதிர்க்க ஸ்டாலின் தயாரா?
234 தொகுதிகளிலிம் தனித்து நின்று காசு கொடுக்காமல் திமுகவால் வெல்ல முடியுமா? கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? என்பதை களத்தில் தனித்து நின்று பார்ப்போம். என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதில்லை. எவ்வளவு வழக்குகள் இருந்தபோதும் என் மீது ஏன் இவ்வளவு வேகம் காட்டுகின்றனர். 5 ஆண்டிற்கு ஒரு முறை தேர்தல் வரும். ஆட்சி மாறும் என்பதை காவல்துறை மனதில் வைக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.