Seeman | Naam Tamilar Katchi: தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். பிறநாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பில் உள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், என்.ஐ.ஏ. சோதனை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "விடுதலைப்புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்? என்னை ஏன் என்.ஐ.ஏ விசாரிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. இந்த சோதனையை நடத்தியுள்ளது. என்.ஐ.ஏ. சோதனையின் மூலம் எனக்கு ஒன்று தெரிகிறது; நான் சரியான பாதையில் செல்கிறேன். நாட்டை கொள்ளையடித்தவர்கள் பயம் இல்லாமல் இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.
விடுதலைப்புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்?. மெயின் ரவுடியே நான் தான். என்னை ஏன் என்.ஐ.ஏ விசாரிக்கவில்லை? நியாயமாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்னிடம்தான் விசாரணை செய்திருக்க வேண்டும். வருகிற 5-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது நானும் நேரில் சென்று ஆஜராக இருக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“