அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமான விசாரணை உத்தரவை பிறப்பித்த அதிகாரி யார்? என்ற கேள்வியை எழுப்பிய சீமான், “அஜித்தின் உயிரை உடம்பிலிருந்து பிரித்தது, காவல்துறையினரின் அடிதான்” எனக் குற்றம் சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் காவல்துறையினரால் விசாரணைக்குள் உயிரிழந்த அஜித் குமார் சம்பவம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து மடப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “குற்றவாளியை குற்றவாளிதான் என எந்த ஒரு ஆட்சியாளன் நினைக்கிறானோ, அவன்தான் சிறந்த ஆட்சியாளன். இதற்கான எடுத்துக்காட்டு கக்கன்” என்றார்.
அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமான விசாரணை உத்தரவை பிறப்பித்த அதிகாரி யார்? என்ற கேள்வியை எழுப்பிய சீமான், “அஜித்தின் உயிரை உடம்பிலிருந்து பிரித்தது, காவல்துறையினரின் அடிதான்” எனக் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து, நான் நடத்த அனுமதி கேட்கும் போராட்டங்களில் பல நெறிமுறைகளை வகுக்கும் காவல்துறை, அஜித் விசாரணையில் நீதிமன்ற விதிமுறைகளை ஏன் பின்பற்றவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
முதல்வர் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதையும் சந்தேகத்துடன் பார்த்த அவர், முதல்வருக்கு தன் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லையா? சி.பி.ஐ விசாரணை உண்மையை வெளிக்கொணரத்தான் இல்லையா, குற்றவாளிகளை பாதுகாப்பதற்கா?" எனக் கூறினார்.
மேலும், “விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் நீதிமன்றம் அறிவுறுத்திய எந்த வழிமுறைகளையும் பின்பற்றவில்லை. நிகிதா மீது அளிக்கப்பட்ட ஏராளமான புகார்களில் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை; விசாரணையும் நடத்தப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
திருப்புவனம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த இந்த மரணம், காவல் துறையின் செயல்பாடு மீதான நம்பிக்கையை சவாலுக்குள்ளாக்குவதாக அவர் தெரிவித்தார்.