சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (அக்.19) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைத்தார்; நான் மறுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மீனவர் பிரச்னை பற்றி பேசிய அவர், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவில் இருந்தவர் என்பதால் தமிழ்நாடு மீனவர் விவகாரத்தில் அவர் மத்திய அரசுக்கு ஆதரவாக பேசுகிறார்” என்றார்.
தொடர்ந்து, “எல்லை மீறி போகும் கேரள மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இல்லை; தமிழ்நாட்டு மீனவர்கள் தான் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அவர்களது உடமைகள் பறிக்கப்படுகின்றன” எனக் குற்றஞ்சாட்டினார்.
காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதும் அணுகுமுறையை விமர்சித்த சீமான், கடிதம் எழுதவா அவரை முதல் அமைச்சர் ஆக்கினோம் என்றார்.
லியோ விவகாரத்தில் தமிழக அரசு விஜய்யை பார்த்து பயப்படுகிறது. அதனால்தான் படத்துக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வாங்கியிருந்தால் நெருக்கடியே வந்திருக்காது” என்றார்.
மேலும், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடப் போகிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“