“திராவிடம் குறித்து பேசுவதை நிறுத்தும் வரை பெரியார் குறித்து தொடர்ந்து பேசுவேன்” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக வியாழக்கிழமை தெரிவித்தார்.
புதுச்சேரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அவரின் பெரியார் பற்றிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு பதில் அளித்து பேசிய சீமான்,பெரியார் குறித்து பேசியதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் அவர்களே வைத்துக் கொண்டு என்னிடம் கேட்டால் எந்த விதத்தில் நியாயம்? அரவாணன் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்கள் இது குறித்து எழுதி இருக்கிறார்கள். அனைத்து ஆதாரங்களையும் முடக்கி வைத்துக் கொண்டு என்னிடம் கேட்டால் என்ன நியாயம்? என்றார்.
பெண்ணினத்தை பற்றி பெரியார் போன்ற பல தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால் ‘பெரியார்தான் பேசினார்’ என்பதைத்தான் நான் எதிர்க்கிறேன்.
கடந்த 2008ஆம் ஆண்டு வரை திருட்டு கூட்டத்தில் நானும் ஒருவனாகதான் இருந்தேன். தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனை சந்தித்த பிறகுதான் கொள்கைகளை மாற்றிக் கொண்டேன். என்னுடைய கொள்கை என்பது திராவிடத்தை ஆதரவாக பேசுபவர்களையும் எதிர்ப்பதுதான் என்றும் திராவிடம் குறித்து பேசுவதை நிறுத்தும் வரை பெரியார் குறித்து தொடர்ந்து பேசுவேன்” என தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர், சீமான் புதுச்சேரி போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புறப்பட்டு சென்றார்.