நெல்லையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில், தங்களைப் பேச அனுமதிக்காமல் வெளியேற்றப்பட்டதாக மாவட்ட நிர்வாகிகள் கூறிய நிலையில், சர்வாதிகாரம் இல்லாமல் எதையும் சரி செய்ய முடியாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் நடந்த இனப் படுகொலைக்குப் பிறகு, சீமான் 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியைத் தொடங்கினார். தமிழ்த் தேசியத்தைக் கொள்கையாகக் கொண்ட நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது முதல் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. இதுவரை நாம் நாம் தமிழர் கட்சி ஒரு சட்டமன்றத் தொகுதியிலோ, நாடளுமன்றத் தொகுதியிலோ வெற்றி பெறவில்லை என்றாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 சதவீதம் வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றது.
அதே நேரத்தில், கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
இதனிடையே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
அந்த வகையில், நெல்லை பாளை. நீதிமன்றம் எதிரே ஒரு திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பங்கேற்க வந்த நிர்வாகிகள், தொண்டர்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வாங்கி வைக்கப்பட்டது. இது நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து, நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து பேசினார். அப்போது, கட்சியின் நிர்வாகிகள் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. அப்போது, பேச முயன்ற நெல்லை மாவட்ட நிர்வாகிகள், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.
நா.த.க கலந்தாய்வுக் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நெல்லை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன், ஊடகங்களிடம் கூறுகையில், கலந்தாய்வுக் கூட்டத்தில் சீமான் மட்டுமே பேசி முடித்தார். கடைசியாக நான் எழுந்து, கட்சியில் மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளைப் பேச முயன்றேன். என்னை பேச விடாமல், ‘இது என் கட்சி, இங்கு நான் மட்டும்தான் பேசுவேன்’ எனக் கூறினார். அதுமட்டுமில்லாமல், ‘நீ யார், சாதிய அடிப்படையில் செயல்படுகிறாய், வெளியே போ’ என திட்டினார். நான் வெளியே வந்துவிட்டேன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நெல்லை வி.கே. புரம் தனியார் திருமண மண்டபத்தில் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றவிடாமல் தடுப்பதற்காக எனது தலைமையில் வரும் டிசம்பர் மாதம் மாஞ்சோலைக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.
நெல்லையில் கலந்தாய்வுக் கூட்டத்தில் நடந்த மோதல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீமான், “கட்சியின் தலைவர் என்பவர் அன்பான சர்வாதிகாரியாக இருந்தால் மட்டுமே கட்சியை வழி நடத்த முடியும். சர்வாதிகாரம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரி செய்ய முடியாது; கட்சி என்றால் ஒரு விதிமுறை உள்ளது; அதற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.