தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 88-வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கலந்து கொண்டார். அப்போது, "வ.உ.சி. கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை.
திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டதுதான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள். வல்லபாய் பட்டேலை தூக்கி பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர்.
தமிழக முதல்வர் தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என்று சொல்வதாக கூறி வருகிறார். என்னுடன் ஒருமுறை வாருங்கள். கவலை, கண்ணீரோடு மக்கள் கதறுவதை ஒருமுறை கேளுங்கள். ஆட்சியாளர் தன்னுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று கூறினால், அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். ஆட்சியைப் பற்றி மக்கள் சொல்ல வேண்டும். தி.மு.க அரசின் ஊடகங்கள் போற்றுகிறது, ஆனால், மக்கள் தூற்றுகிறார்கள்.
காசு கொடுத்து மக்களை அழைத்து வந்து சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கின்றனர். மக்கள் அவர்களாக வருவதில்லை. ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் முதல்வரை பார்க்க வருவதில்லை; வரவழைக்கப்படுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அதற்கான வேலைகள் நடக்கிறது. 2026-ல் நாங்கள் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம். அதில் 117 பெண்கள், 117 ஆண்ளுக்கு வாய்ப்புக் கொடுப்போம். நூறு இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்க இருக்கிறோம். கூட்டணி என்பது தற்கொலைக்குச் சமம் என்ற கோட்பாட்டைக் கொண்டவன் நான்.
மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும் கட்சியான தி.மு.கவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை? அவர்களுக்கு ரெய்டு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைபடியாது கரம் என்பதல்ல, கப்பம் சரியாக கட்டி கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம்.
பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்களையோ அமைச்சர்களையோ சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி, தமிழக முதலமைச்சரையும் விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். காலையில் அப்பா சந்தித்தால் மாலையில் மகன் சந்திக்கிறார். தி.மு.க வும், பா.ஜ.க வும் நேரடியான கூட்டணியில் தான் உள்ளார்கள்" என சீமான் தெரிவிக்த்துள்ளார்.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“