சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தில், நகை திருட்டு வழக்கில் சிக்கிய கோவில் காவலாளி அஜித்குமாரை, தனிப்படை போலீசார் சித்ரவதை செய்ததில் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த போலீஸ் சித்ரவதைக் கொலையைக் கண்டித்து, திருப்புவனத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை (08.07.2025) ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால், போலீசார் அனுமதி அளிக்க மறுத்துள்ளனர். 'தேவகோட்டை கண்டதேவி கோவில், மேலநெட்டூர் சாந்தநாயகி அம்மன் கோவில் ஆகியவற்றில் தேரோட்ட விழா மற்றும் திருப்புவனத்தில் வாரச்சந்தை நடக்க உள்ளதால், போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்ட இடத்தின் அருகே பள்ளிகள் நிறைய உள்ளன என்று காவல்துறை தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், “ஆர்ப்பாட்டம் நடத்துவது எங்கள் உரிமை, அதனால், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம். போலீசாரிடம் அனுமதிதான் கேட்டோம், பாதுகாப்பு அல்ல” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு முதலில் அனுமதிகொடுத்துவிட்டார்கள். நாளைக்கு (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் என்று உறுதி செய்துவிட்ட பிறகு திடீரென அதிகாலை 1 மணிக்கு அனுமதி மறுக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், கண்டதேவியில் தேரோட்டம் இருக்கிறது, அதனால், இருக்கிற காவலர்களை எல்லாம் பாதுகாப்புக்காக அங்கே குவித்துவிடுவோம் என்கிறார்கள்.
நாங்கள் இதுவரை எந்த போராட்டத்துக்கும் கூட்டத்திற்கும் அனுமதிதான் கேட்கிறோமே ஒழிய, பாதுகாப்பு கேட்கவில்லை. என் சொந்த நாட்டில் எங்களுக்கு என்ன பாதுகாப்பு? நாக்கள்தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு. நாங்கள் காவல்துறையிடம், அதிகாரிகளிடம் கேட்பது அனுமதிதான். பாதுகாப்பு அல்ல. அதனால், அங்கே சந்தை இருக்கு. நீங்கள் வந்தால் பெரிய கூட்டம் வரும், உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கூறுகிறார்கள். நான் பாதுகாப்பு கேட்கவில்லை. அனுமதி மறுத்தாலும், நான் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவேன். நீங்கள் வழக்கு போடுங்கள். என்னை சிறையில் வையுங்கள். அதைப் பற்றி எனக்கு ஒன்றுமில்லை. ஆனால், காட்டாற்று வெள்ளத்தை நீங்கள் என்ன பண்ண முடியும், சும்மா கற்களைப் போட்டு குவித்து தடுத்துவிட முடியுமா என்ன? குறித்தபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று சீமான் கூறினார்.