சமீபத்தில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சீமான் சேர்ந்து இருப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சீமான் விடுதலை புலிகளின் தலைவரை சந்தித்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அனைவரும் நம்பியிருந்த வேளையில், ”விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் ”என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரபாகரன் படத்தை அரசியல் ஆதாயத்துக்காக சீமான் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சார்லஸ் அலெக்சாண்டர் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "இலங்கை போர் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையிலும், “மார்பிங்” செய்யப்பட்ட புகைப்படங்களையும் சீமான் பயன்படுத்தி வருகிறார். தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் ஆதாயத்துக்காக பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்தி வருகிறார்.
அதனால், பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.