New Update
/indian-express-tamil/media/media_files/79jglrFyd70V2b404dxT.jpg)
லியோ இசை வெளியீட்டு விழா ரத்துக்கு அரசியலே காரணம். இந்த செயல் கண்டிக்கத்தக்கது; நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
லியோ இசை வெளியீட்டு விழா ரத்துக்கு அரசியலே காரணம். இந்த செயல் கண்டிக்கத்தக்கது; நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினிக்கு ஒரு நியாயம், விஜய்க்கு ஒரு நியாயமா, என கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அதிக டிக்கெட் விற்பனை, போலி டிக்கெட் உள்ளிட்ட காரணங்களால் விழா தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விஜயின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அரசியல் ரீதியாக அனுமதி கொடுக்கவில்லை. தி.மு.க அரசுதான் இதை செய்கிறது என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்காக #DMKFearsThalapathyVIJAY என்ற டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதிக் கொடுக்காததை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வந்திருந்த சீமான், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது குறித்து சீமான் பேசினார்.
சீமான் கூறியதாவது, “நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி வழங்கவில்லை. இத்தனை காலம் அவரின் நிகழ்ச்சி அனுமதி கிடைத்தது. முந்தைய இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அனுமதி கிடைத்தது. ஆனால் இந்த முறை ஏன் அனுமதி கிடைக்கவில்லை. என்ன காரணத்திற்காக கிடைக்கவில்லை. காவல்துறை முன் ஆய்வு செய்து அனுமதி கொடுத்து இருக்கலாமே. கேட்டால் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை காரணம் காட்டுகிறார்கள். அவரின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெருக்கடியை காரணம் காட்டுகிறார்கள். இதெல்லாம் நம்பும் விதமாகவே இல்லை.
கண்டிப்பாக அவரின் நிகழ்ச்சிக்கு அரசியல் அழுத்தம் உள்ளது. பொதுவாக அரசியல் நிகழ்ச்சிகளில் அதிக கூட்டம் கூடும் என்பதால் வேறு இடத்தை கொடுப்பார்கள். அது போல மாற்று இடம் கொடுக்கலாம். அரசியல் கூட்டங்களுக்கு அப்படித்தானே செய்வார்கள். நீங்கள் நடத்துங்கள் நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று பாதுகாப்பு கொடுத்து இருக்கலாம். அதற்குத்தான் அரசு இருக்கிறது.
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவே அரசு. நடத்தவே நடத்த வேண்டாம் என்றால் ஏன் அரசு. நீ உள்ளேயே இரு.. வெளியே வந்தால் ஆபத்து.. செத்து போயிடுவ என்று சொல்வதற்கு போலீஸ் எதற்கு, அரசு எதற்கு? நீ வெளியே வா, உனக்கு பாதுகாப்பு தருகிறேன் என்று சொல்வதே அரசு. அதுவே காவல்துறை. நேரு உள்ளரங்கில் பாதுகாப்பு போடலாமே. நீங்கள் அரசியல் சந்திப்பில் பல ஆயிரம் பேரை அழைக்கிறீர்கள். அப்போது பிரச்சனை இல்லையா? அப்போது பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால் இப்போது எங்கிருந்து வந்தது.
ஏன் விஜய்யை இப்படி செய்கிறீர்கள். ஏன் என் தம்பிக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள். இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இதற்கு முன் விஜய் படங்களுக்கு பாடல் வெளியீட்டு விழாவில் பிரச்சனை வரவில்லை. இப்போது மட்டும் ஏன் இந்த பிரச்சனை. இப்போது மட்டும் ஏன் அனுமதி கொடுக்கவில்லை. எனக்கு இது சரியாக படவில்லை.
ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு பாடல் வெளியீட்டு விழா நடந்ததே. அதற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள். அதற்கு எப்படி பாதுகாப்பு கொடுத்தீர்கள். அங்கே பாதுகாப்பு பிரச்சனை இல்லையா? ஏன் விஜய்யை இப்படி செய்கிறீர்கள். ரஜினிக்கு ஒரு நியாயம் விஜய்க்கு ஒரு நியாயமா? உரிய பாதுகாப்பு கொடுக்கவே காவல்துறை உள்ளது. நீங்கள் நடத்தவே கூடாது என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்.
நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக பெரிய நெருக்கடி கொடுக்கப்படுகிறது, அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என தெரிந்தே விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது, லியோ இசை வெளியீட்டு விழா ரத்துக்கு அரசியலே காரணம். இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு தரமுடியவில்லை என்பது காவல்துறையின் இயலாமையை காட்டுகிறது” இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.