/indian-express-tamil/media/media_files/2025/08/23/seeman-chennai-2025-08-23-18-35-07.jpg)
தூய்மைப் பணியாளர் மரணம்: ஆதாரத்தை வெளியிட்டு சீமான் விளாசல்
சென்னை கண்ணகிநகர் பகுதியில் இன்றுமழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த மரணத்திற்கான காரணம் அரசின் அலட்சியம் மற்றும் மின்சார வாரியத்தின் கவனக்குறைவுதான் என்று குற்றம்சாட்டி, அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிற்கு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், வரலட்சுமி உயிரிழந்த பகுதியில் மின்சார கசிவு குறித்து மணிகண்டன் என்பவர் மின்சார வாரிய அலுவலகத்தில் 2 முறை புகார் அளித்துள்ளார். ஆனால், அந்தப் புகார்கள் அலட்சியப்படுத்தப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது அரசின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. மேலும், தூய்மைப் பணிகள் போன்ற அரசின் அடிப்படைப் பொறுப்பு தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படுவதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்று சீமான் கூறினார். தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் மட்டுமே செயல்படுவதாகவும், மக்களின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்திற்கு அரசு அறிவித்த ரூ.20 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல என்று சீமான் தெரிவித்தார். வரலட்சுமி ஓய்வுபெறும் வயதில் ரூ.85 லட்சம் ஈட்டியிருப்பார் என்று கணக்கிட்டு, அந்த இழப்பீடு வெறும் கண்துடைப்பு என்று சாடினார். எதிர்காலத்தில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க, அரசு மின் விநியோகத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக மழைக்காலம் நெருங்குவதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.
முன்னதாக, உயிரிழந்த வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், அவரது குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். தொடர்ந்து, தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு 70,000 ரூபாய் நிவாரணமாக வழங்கியதுடன், கண்ணீருடன் ஆறுதலும் தெரிவித்துள்ளார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “தூய்மைப் பணியாளர்களை காப்பது அரசோட கடமை: பூட்ஸ், கிளவுஸ், மாஸ்க் கொடுக்கணும்னு எவ்வளவோ முறை சொல்லிருக்கேன். முதலமைச்சர் இங்க வந்தா பூட்ஸ் இல்லாம இந்தப் பகுதிக்கு வருவாரா? மாநிலத்தோட உரிமையை கேட்குறீங்களே. மொதல்ல மாநிலத்தோட மக்கள காப்பாத்துங்க. சிங்கார சென்னையோட அவலத்தை பாருங்க. பணியாளர்கள் அனைவருக்கும் மாநகராட்சி கிளவுஸ் மற்றும் முட்டி வரை இருக்கும் பூட்ஸ் வழங்க வேண்டும். வரலட்சுமி குழந்தைகளை காப்பாற்ற அரசு முழு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.