தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதற்கு ஆளுநர் வெளியேறியதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சீமான் முன்வைத்துள்ளார்.
இன்று (ஜன 6) சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது, "இந்த நாடு மொத்தமாகவே தமிழர்களுக்கு தான் சொந்தம். இந்த நிலப்பரப்பு முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தான் என அம்பேத்கர் கூறுகிறார்.
அவரவர் தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதற்காக தான் மொழிவாரியாக தேசிய இனங்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை தான் பாட வேண்டும்.
இதற்காக ஆளுநர் வெளிநடப்பு செய்தால், அவர் தமிழ்நாட்டை விட்டு மொத்தமாக சென்று விடலாம். இதேபோன்ற நடவடிக்கையை ஆளுநரால் கர்நாடகாவில் மேற்கொள்ள முடியுமா? தேசிய கீதத்தை இசைக்காமல் இருந்தால் அவமதிப்பு என்று கூறலாம்.
ஆனால், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட பின்னர் தான், தேசிய கீதம் பாடப்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம். இதை தான் மக்களாட்சி எனக் கூறுகிறோம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் சபையில் உள்ளனர்.
அவர்களுக்கு இல்லாத அதிகாரம் நியமன உறுப்பினரான ஆளுநருக்கு எங்கிருந்து வந்தது? தமிழர்கள் வரிப்பணம் தான் ஆளுநருக்கு ஊதியமாக கொடுக்கப்படுகிறது. தமிழர்களின் பணம் வேண்டும்; தமிழ் வேண்டாமா? இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
எங்களுக்கு இருக்கும் மொழிப்பற்றை பாசிசமாக கூறுகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது?" என சீமான் கேள்வி எழுப்பினார்.
இதேபோல், சென்னை புத்தக திருவிழாவில் சீமான் பங்கேற்ற நிகழ்வில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட விவகாரமும் அண்மையில் சர்ச்சையை உருவாக்கியது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் சீமான் பதிலளித்தார்.
அதன்படி, "எங்கள் கட்சி நிகழ்ச்சியில் வேறு ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடுகிறோம். இந்த தமிழ்நாட்டில் 'திராவிட நல் திருநாடு' எங்கு இருக்கிறது? ஏற்கனவே இருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தில் 10-க்கும் மேற்பட்ட வரிகளை எடுத்து விட்டனர். நான் மொத்தமாக அந்த பாடலையே எடுத்து விட்டேன்.
நான் அதிகாரத்திற்கு வந்தால் பாரதிதாசன் எழுதிய பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன். நான் கலந்து கொண்டது பொது நிகழ்வு. அரசு விழாவில் வேண்டுமானால் இந்த பாடலை பயன்படுத்தாமல் இருங்கள். நான் அந்த நிகழ்வில் அரசியலுடன் இலக்கியத்தையும் பேசினேன். ஆனால், அதற்கு அடுத்து நடந்த நிகழ்வில் தி.மு.க-வினர் அரசியல் மட்டும் தான் பேசினர்.
அவர்களுக்கு இருப்பது இரத்தம், எங்களுக்கு இருப்பது தக்காளி சட்னியா? நான் பங்கேற்ற நிகழ்வில் தான், உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதற்காக எனக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.