டாஸ்மாக்கில் மதுபான விற்பனை குறைந்து விடும் என்ற காரணத்திற்காக தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், பூரிகுடிசை பகுதியில் பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பில் இன்று (ஜன 21) கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடையில் கள் குடித்து மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக உரையாற்றிய சீமான், "கள் தமிழர்களின் தேசிய பானம். இதனை பனம்பால், தென்னம்பால், ஈச்சம் பால், மூலிகைச் சாறு என்று தான் கூற வேண்டும். பல நோய்களை குணப்படுத்த கள் உதவுகிறது. புதுச்சேரி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் கள் இறக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளுக்கு தடை விதித்து தமிழ்நாட்டில் மட்டும் மது விற்பனை நடைபெறுகிறது. மற்ற மாநில முதல்வர்களுக்கு சாராய ஆலைகள் இல்லை. தமிழ்நாட்டில் இருந்த முதலமைச்சர்கள் பெயரில் சாராய ஆலைகள் இருந்தன.
மது விற்பனையை அதிகரிக்க திட்டமிடுவதாக கூறுகின்றனர். பண்டிகை தினங்களில் ஒரே நாளில் மதுபான விற்பனை சுமார் ரூ. 650 கோடிக்கு விற்பனையாகிறது. பெரும்பாலான குற்றங்கள் மதுபோதையினால் தான் நிகழ்கிறது. ஒரு மனிதனால் 2 லிட்டருக்கு மேல் கள்ளை குடிக்க முடியாது. ஒரு லிட்டர் கள் ரூ. 100 தான் இருக்கும். ஆனால், மதுபான கடைகளில் அதிக விலைக்கு விற்பனை நடைபெறுவதால் தான், தமிழ்நாட்டில் கள்ளை தடை செய்கின்றனர்" எனக் கூறினார்.