நாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும், காளியம்மாள் நாதகவில் இருந்து விலக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த சூழலில், நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் காளியம்மாளின் பெயருக்கு பின்னால் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு இருந்தது. இது, கட்சியில் அவர் இருக்கிறாரா, இல்லையா என்பதில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தனது முடிவு குறித்து விரைவில் அறிவிப்பதாக காளியம்மாள் கூறியதும் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காளியம்மாள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இது குறித்து சீமான் பேசுகையில், "தங்கை காளியம்மாளுக்கு கட்சியில் செயல்படுவதோ, வெளியேறுவதோ முழு உரிமை உள்ளது. நான் தான் அவரை கட்சியில் அழைத்து வந்தேன். அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. எங்கள் கட்சி கொள்கைக்கு ஏற்ப, வருபவர்களை வரவேற்கிறோம், செல்லுபவர்களை வாழ்த்துகிறோம். பருவ மாற்றம் போலவே, கட்சிக்கும் இயற்கைச்சுழற்சி உண்டு. இது எங்களுக்கான களையுதிர் காலம்.
மேலும், புதிய கல்விக்கொள்கையை தி.மு.க., எதிர்ப்பது உண்மையல்ல மொழி மீதான பற்றுக்கோடு தேசத்துரோகம் அல்ல. அனைவரும் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க உரிமை பெற்றிருக்க வேண்டும். நாட்டில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆங்கிலம் பயன்பாட்டு மொழியாக இருக்கலாம். விருப்பத்தின்படி பல மொழிகள் கற்றுக்கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.