/tamil-ie/media/media_files/uploads/2023/04/seeman.jpg)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டார்.
இதில் அந்த மாணவரின் தங்கை மீதும் வெட்டு விழுந்தது. இருவரும் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதை நேரில் பார்த்த மாணவன்-மாணவியின் தாத்தா நிகழ்விடத்திலே மரணம் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், “நாங்குநேரியில் பள்ளி மாணவன் தம்பி சின்னத்துரையும், அவரது தங்கையும் சாதிவெறியர்களால் வீடுபுகுந்து தாக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் சிலரால் சாதியப்பாகுபாடு காட்டப்பட்டு அவமதிக்கப்பட்டது குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததால் தம்பி சின்னத்துரை மீதும், தடுக்க வந்த அவரது தங்கை மீதும் கொலைவெறித்தாக்குதல் தொடுக்கப்பட்டு, இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும், இத்தாக்குதலின்போது அதிர்ச்சி தாளாது அவரது தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் இறந்துபோனதுமான கோர நிகழ்வுகள் பெரும் மனவேதனையளிக்கின்றன.
ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய அறிவுக் கருவறையாக விளங்கும் கல்விக்கூடங்களிலேயே சாதியரீதியாகப் பாகுபாட்டுணர்வு காட்டப்படுவதும், அதன்விளைவாக கொடும் வன்முறை ஏவப்பட்டதுமான நிகழ்வுகள் வெட்கித் தலைகுனியச்செய்கின்றன.
பள்ளி, கல்லூரி எனும் கல்வி நிறுவனங்களில் சாதி, மதரீதியான வேறுபாட்டுணர்வுகளும், செயல்பாடுகளும் ஒருபோதும் ஏற்புடையதல்ல! அவை கடும் சட்ட நடவடிக்கையின் மூலம் முற்றாகத் துடைத்தெரியப்பட வேண்டும். “ஒழுக்கத்தின் மூலமான உயர்ந்த குணங்களும், செயல்பாடுகளும்தான் பெருமையே ஒழிய, சாதியல்ல” என்கிறார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்.
அப்படி, ஒழுக்கத்தினாலும், உயர்ந்த குணத்தினாலும், கல்வித்திறனாலும் சிறந்த மாணவனாக விளங்கிய தம்பி சின்னத்துரையை சாதியத்தினைக் கொண்டு தாழ்த்த முற்படுவதும், ஒடுக்க நினைப்பதும், அதன் நீட்சியாக வன்முறையை ஏவிவிட்டதுமான கொடுங்கோல் போக்குகள் ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.
ஆகவே, இவ்விவகாரத்தில் சாதிவெறியோடு கொலைவெறித்தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனவும், தம்பி சின்னத்துரைக்கும், அவரது தங்கைக்கும் உயரிய சிகிச்சை அளித்து, அவர்கள் மீண்டுவரவும், கல்வியினைப் பாதுகாப்பாகத் தொடரவும் வழிவாய்ப்புகளைச் செய்துதர வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜான் பாண்டியன்
“இது திராவிட மண், திராவிட மாடல் என்று மேடைக்கு மேடை பேசும் திமுக அரசே! எங்கே சமூக நீதி! எங்கே சமத்துவம்!! தமிழகத்தில் தீண்டாமை, சட்டம் - ஒழுங்கு, போன்றவைகள் இன்னும் ஒழிக்கப்படவில்லை.
நாங்குநேரியில் அரங்கேறிய சம்பவம் போன்று வேறு எங்கும் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.