நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், 6 முறை கருகலைப்பு செய்துள்ளதாகவும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இதையடுத்து விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிபதி இந்த வழக்கை சர்வ சாதாரணமாக முடித்து விட முடியாது" என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 12 வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்ட நிலையில் போலீசார் விஜயலட்சுமியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தி மீண்டும் வாக்குமூலம் பெற்றனர்.
இந்நிலையில் சீமானை வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறும் சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. அதன் படி பிப்ரவரி 27 வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் ஆஜராகாமல் அரசியல் பணிக்காக வெளியூர் செல்வதால் 4 வார காலம் அவகாசம் சீமான் தரப்பு வக்கீல் கேட்டிருந்தார்.
மேலும் இதனை தொடர்ந்து ஆஜராகும்படி சம்மன் ஒட்டப்பட்டது. ஆனாலும் அதனை சீமான் வீட்டு காவலாளி உட்பட இருவர் கிழித்தது என பல பிரச்சனைகள் அடுத்தடுத்து நடந்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் விசாரணைக்காக நேரில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக ஓசூரில் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “இது கேவலமான ஒரு நடவடிக்கை. காவல்துறை இந்த வழக்கில் 3 மணி நேரம் விசாரித்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். திருப்பியும் சம்மன் அனுப்பி அதே வாக்குமூலத்தைத் தான் பதிவு செய்ய உள்ளனர்.
காவல்துறையினர் திரும்ப என்னை அசிங்கப்படுத்த இதனைச் செய்கின்றனர். தர்மபுரியில் கட்சிப் பணி உள்ளதால் ஆஜராக முடியாது” என்று கூறினார்.