நீண்ட இழுபறிக்கு பிறகு சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்யாமல் விடுவித்தது போலீஸ். அவருடன் இருந்தவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 10-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடைபெற்ற ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு போலீஸார் மீது நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் இதை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தார்.
சீமான் இதற்கு விளக்கம் அளிக்கையில், ‘போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு எதிர் வினை அது! ஆனாலும் அந்தத் தாக்குதலின்போது நான் தொண்டர்களை தடுத்து சமாதானப்படுத்தினேன்’ என்றார். ஆனால் போலீஸார் அந்த நிகழ்வு தொடர்பாக சீமான் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டு சீமான் கைதானார். பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா மண்டபத்தில் அவரை அடைத்து வைத்தனர். தமிமுன் அன்சாரி உள்ளிட்ட வேறு சில தலைவர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தனர். மாலையில் அந்த மண்டபத்தை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டது.
வழக்கமாக போராட்டங்களில் ஈடுபடுகிறவர்களை காலையில் கைது செய்து மாலையில் விடுவிப்பது வழக்கம். ஆனால் சீமான் மீது கடந்த 10-ம் தேதி சேப்பாக்கம் நிகழ்வு தொடர்பாக கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை கைது செய்ய போலீஸ் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்வு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் 21 பேர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சீமானை கைது செய்ய போலீஸ் தயாராகி வருவது தெரிந்ததும், நாம் தமிழர் கட்சியினர் பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா மண்டபத்திற்கு விரைந்தனர். இதனால் அங்கு பரபரப்பாக சூழல் ஏற்பட்டிருக்கிறது.
சீமானை விடுதலை செய்ய கோரி நடிகர் மன்சூர் அலிகான், சுப. உதயகுமார் உள்ளிட்டோர் சென்னை பல்லாவரத்தில் போராட்டம் நடத்தினர். மண்டபம் முன் போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இயக்குனர் பாரதிராஜா, சீமான், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கைது செய்து பல்லாவரம் மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதைத் தொடர்ந்து, மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார்.
இரவு 8.30 : நீண்ட இழுபறிக்கு பிறகு சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்யாமல் விடுவித்தது போலீஸ். அவருடன் இருந்தவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
இரவு 8.20 : நாம் தமிழர் கட்சி செய்திப்பிரிவு வெளியிட்ட அறிவிப்பில், ‘எவ்வித போராட்டங்களையும் அறிவிப்புக்கு முன் முன்னெடுக்க வேண்டாம். தலைமையிலிருந்து அறிவிப்பு வெளியாகும் வரை பொறுமை காக்கவும். சட்டப்படி எதையும் எதிர்கொள்வோம்.’ என கூறப்பட்டது. எனவே சீமான் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராகிவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் அவரை சுற்றி இருந்தவர்கள், அவரை போலீஸ் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
இரவு 8.15 : இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் பல்லாவரத்தில் மண்டபத்திற்கு வருகை தந்து பாரதிராஜாவை சந்தித்து பேசினார்.
இரவு 8.00 : சீமானை விடுதலை செய்ய கோரி பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப. உதயகுமாரன் சென்னை பல்லாவரத்தில் போராட்டம் நடத்தினார்.
மாலை 6.00 : மன்சூர் அலிகான் அங்கு இருந்த போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். ‘என்னையும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யுங்கள்’ என மன்சூர் அலிகான் ஆவேசப்பட்டார்.
மாலை 5.45 : சீமானை காண நடிகர் மன்சூர் அலிகான், மண்டபத்திற்கு வந்தார்.
மாலை 5.30 : சீமானை சந்திக்க அவரது வழக்கறிஞர் வந்தார். ஆனால் அவரை மண்டபத்திற்குள் போலீஸ் அனுமதிக்கவில்லை. மண்டபத்தின் உள்ளே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளை தவிர்த்து மற்றவர்களை வெளியேற போலீஸார் வற்புறுத்தி வருகிறார்கள்.
மாலை 5.15 : சீமானை கைது செய்யவிட மாட்டோம் என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, தமிழர் தேசிய முன்னணி பாரதிச்செல்வன் உள்ளிட்டோர் மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சீமானை கைது செய்யவிட மாட்டோம் என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, தமிழர் தேசிய முன்னணி பாரதிச்செல்வன் உள்ளிட்டோர் மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். pic.twitter.com/JYJLBfctHZ
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) 12 April 2018
மாலை 5.00 : ‘காவிரி உரிமை மீட்புக்காக போராடிய சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 8 பொய் வழக்குகள் சுமத்தி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,
நாம் தமிழர் உறவுகள் உடனடியாக பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா மண்டபம் விரையுமாறும் அவரது கட்சியினர் சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்தபடி இருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.