ஆயுள் தண்டனை கைதி பாஷா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆகியோர் பாஷா-வின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த பாஷா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
உக்கடம் ரோஸ் அவென்யூ பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் கூறியதாவது: “கோவை சிறையில் இருந்த போது பாஷாவுடன் மனம் விட்டு பேசி இருக்கிறேன்.இது மிகப்பெரிய துயரம். அவரை இழந்து வாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக மீதமுள்ள சிறைவாசிகளை வெளியே கொண்டு வர போராடுவோம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் தொடர் போராட்டங்களால் தான் விடுதலையானார்கள். இப்பிரச்சனையை சட்டத்தின்படி அணுகுவது சரியல்ல. மனிதநேய அடிப்படையில் அணுகி சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்காக ஆளுநரிடம் மனு அளிப்பது வீண் வேலை, ஆளுநருக்கும், பா.ஜ.க-விற்கும் ஒரே கொள்கை நிலைப்பாடு தான், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசுவது, சிந்திப்பது தவிர அவர்களுக்கு வேறு கொள்கை இல்லை, அவர்களிடம் பாகிஸ்தான் பக்கத்து நாடு, பசுநாடு, ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் தான் இருக்கிறது, பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிற்கு அந்தப் பக்கம் இருந்தால், அவர்களுக்கு அரசியல் கிடையாது” என்று கூறினார்.
மேலும், “இதில் ஆளுநர் கையெழுத்திட மாட்டார், மக்களின் பிரதிநித்துவம் பெற்ற ஆட்சியதிகாரத்திற்கு இல்லாத அதிகாரம், நியமன உறுப்பினரான ஆளுநருக்கு இருக்கிறது என்றால் மக்களாட்சி எங்கே இருக்கிறது..? இது தான் ஜனநாயகமா..? மக்களின் மனநிலைக்கு ஏற்ப அரசாட்சி செய்ய வேண்டும் எனவும், ஆளுநர் நியமன உறுப்பினர் தான், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் இல்லை, அவருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்றால், தேர்தல் எதற்கு..? எங்களிடம் அதிகாரம் இருந்தால் , ஆளுநர் கையெழுத்தை அப்புறம் பார்க்கலாம் என சிறை கதவுகளை திறந்து விட்டு இருப்போம். வழக்கு தானே போடுவார்கள் அதனை எதிர்கொள்வோம் அதற்கு வாய்ப்பில்லாத போது இதை பேசி பயனில்லை” என சீமான் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கூறியதாவது: “பாஷாவின் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு, நாடு முழுக்க சிலர் திட்டமிட்டு மதத்தின் பேரால், கடவுளின் பேரால் மக்களை பிரித்து அரசியல் அதிகாரத்தை நுகர்வதற்காக அப்பாவி மக்களை இரையாக்குவது தொடர்ந்து வருகிறது எனவும், அதற்கு எதிர் வினையாக செயலாற்றிய பாஷா 25 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
அடக்குமுறை மற்றும் பாசிசத்திற்கு எதிரான குரலாக அவரது குரல் இருந்தது எனவும், தி.மு.க அரசு அவருக்கு விடுப்பு தந்தது, அவரது முழு விடுதலைக்காக தொடர்ந்து போராடி வந்தோம் அவர் நம்மை விட்டு பிரிந்து இருப்பது வருத்தத்திற்கு உரியது என தெரிவித்தார். அமைதியான சூழல் உருவாக மதவாதம், பாசிசத்திற்கு எதிராக உறுதியேற்போம். மனிதநேயத்தை வளர்த்து ஜனநாயகத்தை பாதுகாப்போம் என தனியரசு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாலை 3 மணி அளவில் பாட்ஷாவின் இறுதி ஊர்வலம் துவங்கியது. ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் இருசக்கர வாகனங்களில், பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இறுதி ஊர்வலம் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் பள்ளிவாசலில் நிறைவடைந்தது.
ஊர்வலம் செல்லும் பாதையில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருந்தனர். எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி இறுதி ஊர்வலம் நிறைவடைந்த நிலையில் திப்பு சுல்தான் பள்ளிவாசலில் உடலை அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“