காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சென்னையின் 2வது புதிய விமான நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னைக்கான 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமையவுள்ளது. புதிய விமான நிலையம் அமைப்பதற்கான உத்தேச திட்ட மதிப்பு 20 ஆயிரம் கோடி. 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் விமான நிலையம் அமையப்படவுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனிடையே, விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை கையப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து, புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து விமான நிலையம் அமைக்க முயல்வது கண்டனத்துக்கு உரியது என தெரிவித்துள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பயன்படும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது வேகமாக நடந்து வரும் நிலையில், அவசர அவசரமாகப் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை என்ன வந்தது?
உண்ண உணவு தரும் விளைநிலங்களையும், குடிப்பதற்கு நீர் தரும் நீர்நிலைகளையும், மக்கள் வாழும் வீடுகளையும் அழித்தொழித்து அதன்மீது ஓடுபாதைகளையும், தொழிற்சாலைகளையும், வணிக வளாகங்களையும் அமைப்பதை வளர்ச்சி என்று அரசே கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள தனியார் கட்டடங்களை இடிப்பதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசு, விமான நிலையம் அமைப்பதற்குத் தானே நீர்நிலைகளை அழிக்க முயல்வது எவ்வகையில் நியாயமாகும்?
மேலும், மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப சாலைகள், இரயில் பாதைகள், விமான நிலையங்கள் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வதோ, புதிதாக அமைப்பதோ அவசியம்தான் என்றாலும், அவை பயன்பாடு இல்லாத தரிசு நிலங்களில் மேற்கொள்ள வேண்டுமே தவிர விளைநிலங்களையும், வீட்டுமனைகளையும், நீர்நிலைகளையும் அழித்து உருவாக்கப்படுவதாக இருக்கக்கூடாது. கிராமப்புறங்களில் பாமர மக்களிடம் விளைநிலங்களையும், வீடுகளையும் வலிந்து அபகரிக்கும் அரசுகள், மாநகரங்களில் பெரும் செல்வந்தர்களின் வீடுகளையோ, பெருமுதலாளிகளின் சொத்துக்களையோ அழித்து, பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை எடுத்து அதன்மீது விமான நிலையங்களை அமைக்கும் துணிவிருக்கிறதா?
செயற்கையாக உருவாக்கப்பட்ட வணிக வளாகங்களை விட, உயிர்கள் வாழ உணவளிக்கும் விளைநிலங்கள் மதிப்பில் குறைந்தவை என்ற முடிவுக்கு அரசு வந்தது எப்படி?
பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்துப் புதிய விண்ணூர்தி நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட்டு, மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விளைநிலங்களோ, நீர்நிலைகளோ, வீடுகளோ இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும்” என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.