திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது, அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும், நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் அப்போது எஸ்.பியாக இருந்த டி ஐ ஜி வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசினார்.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி விஜயா முன்பு நடைபெற்று வருகிறது. டி.ஐ.ஜி வருண்குமார் தரப்பில் ஏற்கனவே அவருடைய வாதங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று சீமான் தரப்பில் அவருடைய விளக்கத்தை நேரில் வந்து தெரிவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்து இருந்தார். அதன்படி, சீமான் இன்று சென்னையில் ஒரு புது நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பதால் தன்னால் வர இயலாது எனக் கூறி தனது தரப்பு வழக்கறிஞர் சங்கர் மூலம் அவருடைய வாதங்களை நீதிபதி விஜயா முன்பு எடுத்து வைத்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சீமான் தரப்பு சார்பில் விளக்கம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
'சம்மந்தப்பட்டவர் எங்கு பேசினாரோ அந்த நீதிமன்ற வரம்புக்குள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும். எனவே இந்த வழக்கை விசாரிக்காமல் நீதிபதி அவர்கள் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் டி.ஐ.ஜி வருண் குமார் தன்னுடைய நற்பெயர்க்கு கலங்கம் விளைவித்ததாக கூறியுள்ளார். 2015 ஆம் ஆண்டு அவர் ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் 20 நாட்கள் சிறையில் இருந்தவர் வருண்குமார். அவருக்கு எப்படி நற்பெயர் இருக்கும் அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரை சென்று சமாதானம் பேசி முடித்தவர்' என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. எனவே இந்த வழக்கு முழுக்க முழுக்க சீமான் அவர்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவும் வருண் குமார் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வழக்கை பதிவு செய்துள்ளார். அதனால் நீதிபதி அவர்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சீமான் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி விஜயா, வரும் ஜூன் மாதம் நான்காம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார். அன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பது குறித்து நீதிபதி உத்தரவிடுவார்.
இது குறித்து பேசிய சீமான் தரப்பு வழக்கறிஞர் சங்கர், "டி ஐ ஜி வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்ததல்ல இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிபதியிடம் எங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளோம். எங்கள் தரப்பு வாதம் முழுவதையும் நீதிபதி கேட்டுள்ளார். இதுகுறித்து அடுத்து வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிபதி முடிவு எடுப்பார்.
சீமான் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறியதாக பரவும் தகவல்கள் தவறானது. ஒரு முறை மட்டுமே சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்ற உத்தரவை மதித்து சீமான் நேரில் ஆஜராகினார். மீண்டும், மீண்டும் அவர் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, டி ஐ ஜி வருண்குமார் தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "சீமான் பேசியது தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என கூறுவது தவறு அவதூறு வழக்கை எங்கு வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம்." என்று கூறினார்.
சீமானுக்கு எதிராக திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், அடுத்த மாதம் நான்காம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்பது குறித்து தெரியவரும்.
சீமான்-டிஐஜி வருண்குமார் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்ட மோதல் வழக்கு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வரும் போதெல்லாம் நீதிமன்றமே பெரும் பரபரப்புக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.