ச.செல்வராஜ்
சீமான் - வேல்முருகன் ஆகியோர் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், பின்னர் தனித்தனியாக அணி அமைத்து போராடுவது ஏன்?
சீமான், வேல்முருகன் ஆகிய இருவரும் தமிழக அரசியலில் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் தலைவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வாக்கு வங்கி அரசியலில் இவர்களின் பலம் பெரிதாக இல்லாவிட்டாலும், தமிழக பிரச்னைகளை வீரியமாக முன்னெடுக்க இவர்களையே இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து இயங்கும் நாம் தமிழர் கட்சியை தமிழகத்தில் பெரும்பாலான இதரக் கட்சிகள் ஏற்பதில்லை. காரணம், சீமான் முன்வைக்கும் மண்ணின் மைந்தர்கள் கோஷம்! தமிழர் என்பதற்கு நாம் தமிழர் கட்சி வைக்கும் விளக்கத்தை பெரும்பாலான கட்சிகள் ஏற்கவில்லை.
வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சியோ பாஜக தவிர பெரும்பாலான கட்சிகளுடன் இணைந்து இயங்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில்தான் காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தொடக்கத்தில் வேறு பல கட்சிகளுடன் சீமானும், வேல்முருகனும் கை கோர்த்தார்கள். இருவரும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஒரு பேட்டியில் இணைந்து நின்றனர்.
நெய்வேலியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் வரை இவர்களது ஒற்றுமை நீடித்தது. ஆனால் ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் தனி ஆவர்த்தனத்தில் இறங்கிவிட்டார்கள். அன்று காலையிலேயே சேப்பாக்கம் மைதான வாயிலில் பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்தி நாம் தமிழர் கட்சியினர் கைதானார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தனியாக மறியலில் ஈடுபட்டனர். மாலையில் பாரதிராஜா, தமிமுன் அன்சாரி சகிதமாக சீமான் பெரும் கூட்டமாக போராட்டத்தை முன்னெடுத்தார்.
சீமானின் நாம் தமிழர் கட்சியினரே போலீஸாருடன் மல்லுக்கட்டு, மைதானம் உள்ளே புகுந்து கட்சிக் கொடியை அசைத்தது என பரபரப்பில் இருந்தனர். இதன்பிறகும் காவிரி உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் பாரதிராஜா, அமீர், சீமான் ஆகியோர் முன்னெடுப்பில் ஏப்ரல் 12-ம் தேதி பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டினார்கள். வேல்முருகன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுடன் இணைந்து தனியாக கருப்புக் கொடி காட்டினார். பழ.நெடுமாறன் இயக்கத்தினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் ஒத்துப் போகாது என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
காவிரி தொடர்பான அடுத்த கட்டப் போராட்டத்திற்கு ஏற்கனவே தன்னை ஒருங்கிணைப்பாளராக கொண்டு இயங்கிய தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு புதுப்பித்துத் கொண்டிருக்கிறார் வேல்முருகன். ஏப்ரல் 19-ம் தேதி சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அலுவலகத்தில் இது தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் வேல்முருகன், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் வன்னியரசு, கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் தனியரசு எம்.எல்.ஏ. மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சீமான், காவிரி உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் மணியரசன், பாரதிராஜா, அமீர் ஆகியோருடன் இணைந்து இயங்கும் திட்டத்தில் இருக்கிறார். ஆக, வேல்முருகன் மற்றும் சீமான் ஆகியோரின் நோக்கம் காவிரி மேலாண்மை வாரியம்தான் என்றாலும் தனித்தனி போராட்டப் பாதையை தேர்வு செய்கிறார்கள்.
சீமான் - வேல்முருகன் இடையே என்ன பிரச்னை என விசாரித்தோம்? “இருவருக்கும் நேரடியாக பிரச்னை இல்லை. ஆனால் பாரதிராஜா, அமீர் என சினிமாக்காரர்களை முன்னிறுத்திப் போராடுவதில் வேல்முருகனுக்கு உடன்பாடில்லை. சினிமாக்காரர்கள் தொடர்ந்து களத்தில் நிற்கவோ, சிறை செல்லவோ தயாராக மாட்டார்கள் என்பது வேல்முருகன் நிலைப்பாடு!
ஆனால் பாரதிராஜாவுடன் இணைந்து நிற்கவே சீமானுக்கு விருப்பம்! தவிர, சீமானுடன் நிற்கும் பெ.மணியரசன் - விடுதலை சிறுத்தைகள் இடையே கசப்புணர்வு இருப்பதாக தெரிகிறது. சீமானின் சுத்த தமிழ்த் தேசிய கோஷங்களில் மே 17, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு உடன்பாடு இல்லை. இதனால்தான் மேற்படி அமைப்புகளை இணைத்து வேல்முருகன் தனது தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பை புனரமைத்துக் கொண்டிருக்கிறார்’ என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்!
ஆனாலும் பொதுவான அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் சீமானும், வேல்முருகனும் இணைந்து கலந்து கொள்ளவே செய்கிறார்கள். ஏப்ரல் 19-ம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் மாணவர்கள் அமைப்பினர் முன்னெடுத்த நீட் எதிர்ப்பு கருத்தரங்கில் இருவரும் பங்கேற்றனர். போராட்டப் பாதையிலும் இருவரும் இணைந்தால் வலுவான போராட்டங்களை முன்னெடுக்க முடியும் என இருவரின் நலம் விரும்பிகள் கருத்து கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.