/indian-express-tamil/media/media_files/2025/09/03/seeman-2-2025-09-03-20-22-49.jpg)
ஈ.வி.எம். முதல் தெரு நாய்கள் வரை: சீமான் முன்வைத்த காரசாரமான குற்றச்சாட்டுகள்
ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றின் அவசியத்தை கேள்விக்குள்ளாக்குகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும், நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு காங்கிரஸே காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), நீட் தேர்வு, கச்சத்தீவு, காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை போன்ற முக்கிய விவகாரங்களில் நீதிமன்றமே முடிவெடுக்கும் சூழல் உள்ளது. அப்படி என்றால் சட்டமன்றமும், நாடாளுமன்றமும் எதற்கு? மக்களாட்சி என்பது வெறும் சொல்லாட்சியாகவே உள்ளது. இங்கு ஜனநாயகம் எங்கே இருக்கிறது?
அமைச்சர், பிரதமர் போன்ற பதவிகளுக்கு எந்தத் தேர்வும் வைக்காதபோது, மருத்துவம், ஆசிரியர் போன்ற தொழில்முறைக்கு மட்டும் தகுதித் தேர்வு வைப்பது ஏன்? இத்தகைய தேர்வுகளால் கல்வி வியாபாரம் அதிகரித்துள்ளது. நீட் தேர்வு பயிற்சிக்கு லட்சக்கணக்கில் செலவு செய்தாலும், மருத்துவப் படிப்பிற்காக மேலும் பல லட்சங்களை செலவு செய்ய வேண்டியுள்ளது. நீட் பயிற்சி என செல்லும்போது ரூ.5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் அதிலும் தேர்ச்சி பெற்று வந்தால் ரூ.35 லட்சம் வரை கட்டி படிக்க வேண்டி உள்ளது. இதனால், தகுதியான மருத்துவர்களுக்குப் பதிலாக போலி மருத்துவர்கள் உருவாகிறார்கள்.
ஓட்டுத் திருட்டு: வாக்குச் சீட்டு முறைக்கு வர ராகுல் காந்தி தயாரா?
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்ததோ அதைத்தான் தற்போது பாஜகவும் செய்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் (EVM) முறைகேடுகள் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ராகுல் காந்தி வாக்குச்சீட்டு முறைக்கு வருமாறு ஏன் கோரிக்கை வைக்கவில்லை?
ஜப்பான் போன்ற நாடுகள் EVM-ஐ பயன்படுத்துவதில்லை. வங்கதேசம், நைஜீரியா, இந்தியா என மூன்று நாடுகள்தான் இதை பயன்படுத்துகின்றன. இதில் வங்கதேசம் ஏற்கனவே இதை கைவிட்டது. ஈரோடு கிழக்கு தேர்தலில் எனது 25,500 வாக்குகளை நிறுத்திய தேர்தல் ஆணையம், வாக்குக்கு பணம் கொடுத்ததை ஏன் தடுக்கவில்லை? EVM-ஐ தூக்கி எறிந்துவிட்டு, வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும்.
சாதிப் பாகுபாடு: முதல் குடிமகளுக்கு நேர்ந்த அவமானம்
ஜாதிப் பாகுபாடுகள் இந்த நாட்டின் மிகப்பெரிய அவமானம். நாட்டின் முதல் குடிமகள் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரான பிறகும், பொது நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி, அத்வானி போன்றவர்கள் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர் மட்டும் நின்றிருந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. அவர் கோவிலுக்குள் செல்ல முடியாமல் வெளியே நிற்க நேர்ந்ததும் ஒரு உதாரணம். இத்தகைய மனநோய் ஒழிக்கப்பட வேண்டும்.
தெரு நாய்கள்: வெளிநாட்டு நாய்கள் வந்ததால் ஏற்பட்ட விளைவு
தெரு நாய்களை ஒழிப்பது குறித்து கமல் தெரிவித்த கருத்து குறித்து, தெரு நாய்களை ஒழித்தால் எலிகள் பெருகி பிளேக் போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. நாம் நமது நாட்டு நாய்களை பராமரிக்காமல் வெளிநாட்டு நாய்களை வீட்டுக்குள் வளர்க்கத் தொடங்கியதால், நமது நாட்டு நாய்கள் தெரு நாய்கள் ஆகிவிட்டன. முறையாக பராமரித்து தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையைத் தீர்க்கலாம். ஏழையை ஒழிக்க ஏழைகளைக் கொன்றுவிட முடியுமா? அதேபோல் தெரு நாய்களை முற்றிலுமாக ஒழிக்கக் கூடாது. அரசாங்கம் இந்த விஷயத்தில் முயற்சி எடுக்க வேண்டும்.
தமிழக வெற்றி கழகம்: கொள்கைக்கும், அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?
தமிழக வெற்றி கழகம் பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் கூறுவது குறித்து கேள்வி எழுப்பினார். இந்த இரு கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்? காங்கிரஸையும், அதிமுகவையும் புனிதப்படுத்துகிறார்களா? கச்சத்தீவு, நீட் தேர்வு போன்ற பிரச்சனைகளைக் கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான். தமிழினப் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸை அவர்கள் கண்டிக்காதது ஏன்? ஊழல் குற்றச்சாட்டுக்குச் சிறை சென்ற அதிமுகவை அவர்கள் பற்றிப் பேசாதது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சிப் போராட்டங்களுக்குக் காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து, பிரச்சனையை அரசு தீர்க்கவில்லை என்றால் நாங்களே பிரச்சனையாக மாறுவோம் என்று எங்களது தலைவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளதாகக் கூறும் அரசு, ஒரு லட்சம் பிரச்சனைகளை வைத்துள்ளது என்றே பொருள். மக்கள் அழைக்கும்போது நாங்கள் களத்தில் நிற்போம் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.