/indian-express-tamil/media/media_files/2025/01/22/BA7f2BfbGiOCrVhkSpxo.jpg)
சீமான் வீடு முன் குவிந்த ஆதரவாளர்கள்
தந்தை பெரியாரை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் இன்று முற்றுகையிடுவதாக அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் சென்னை நீலாங்கரையில் முற்றுகையிட உள்ள பெரியாரிய உணர்வாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீமான் வீடு முன்பாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் இரவு முதலே குவிந்துள்ளனர். தந்தை பெரியார் குறித்து சில நாட்களாக சீமான் தொடர்ந்து அவதூறாகவும் ஆதாரம் இல்லாமலும் பேசி வருவதாக பெரியார் உணர்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் குறித்து சீமான், "தந்தை பெரியார் தாய் மொழியை சனியன் என்று கூறினார்; வள்ளலாரை விட பெரியார் என்ன புரட்சி செய்துவிட்டார்; தாய்- மகளுடன் உறவு வைத்துக் கொள்ள சொன்னவர்தான் பெரியார்- அவரா பெண்ணுரிமைக்கு போராடியவர்; அம்பேத்கரும் பெரியாரும் எந்த புள்ளியில் ஒன்றாக இணைகிறார்கள்?" என்றெல்லாம் அடுத்தடுத்து சீமான் விமர்சித்துள்ளார்.
சீமானின் இந்தப் பேச்சுக்கு பெரியார் உணர்வாளர்கள் ஆதாரங்கள் கேட்ட போது, பெரியார் புத்தகங்களை நாட்டுடைமையாக்கினால் அதில் கிடைக்கும் என அலட்சியமாக பதில் கூறியதால் சீமானுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது, சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் சீமான் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிய சீமான் வீடு இன்று (ஜனவரி 22) முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திக, மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் அமைப்பு அறிவித்தது.
இது தொடர்பான சுவரொட்டிகள் சென்னை மாநகர் மற்றும் நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பாக ஒட்டப்பட்டன. இந்த நிலையில் சீமான் வீட்டுக்கு பாதுகாப்பு தரும் வகையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் நேற்று இரவு முதலே அவரது வீடு முன்பாக குவிந்துள்ளனர்.
முற்றுகை போராட்டத்தையடுத்து பேட்டியளித்த சீமான், "என்னுடைய கருத்து தவறு என்றால் பெரியார் கருத்தும் தவறு தான்; 15 ஆண்டுகளுக்கு பின் தற்போது பிரபாகரன் புகைப்படம் குறித்து பேசுவது ஏன்?;15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?;பிரபாகரனா? பெரியாரா? என மோதி பார்ப்பது என்று ஆகிவிட்டது" என சீமான் பேட்டி அளித்துள்ளார்.
சீமான் வீட்டை முற்றுகையிட வரும் பெரியாரிய உணர்வாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் 'விருந்து' வைக்க தயாராக இருக்கிறோம்; வந்து முற்றுகையிடுங்கள் என பதிலடி தரப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 220 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சீமான் வீட்டு முன்பாக குவிந்துள்ள நா.த.கொண்டர்களுக்கு சுடசுட உணவு பரிமாறப்பட்டு வருகிறது. காலை உணவாக இட்லி, பொங்கல், வடை விநியோகிக்கப்படுகிறது. மதிய உணவாக பிரியாணியும் அசைவ உணவுகளும் தயாராகி வருகின்றன. சண்டை போட்டு விட்டு சாப்பிடலாம் என்று நினைத்தோம் சாப்பிட்டு விட்டு தற்போது சண்டை போடலாம் என முடிவு எடுத்துள்ளோம் என்று நா.த.கவினர் கூறியுள்ளனர்.
பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ள பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சீமானின் உருவப் படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து கண்டனம் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.